
அண்ணா பிறந்தநாளில் சைக்கிள் போட்டியில் 245 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி திருச்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியினை மேயர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


இதில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூர போட்டியும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூர போட்டியும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூர போட்டியும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூர போட்டியும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூர போட்டியும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூர போட்டியும் நடத்தப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 245 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையாக முறையே தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.

இந்நிகழ்வில் திருச்சி ஆர்டிஓ தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசுகந்தி, விளையாட்டு விடுதி மேலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
