சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த மாதம்தோறும் ஜி.எஸ்.டி.ஆர்-1, ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதில் ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவத்தை மாதம்தோறும் 20-ம் தேதிக்குள் தாமதக் கட்டணம் இன்றி தாக்கல் செய்யலாம்.
இந்நிலையில், ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் செய்ய, ஒரு மாதத்தில் எந்தவித சேவையோ, விற்பனையோ இல்லையெனில் அந்த மாதத்துக்கு மொபைல் போனிலிருந்து 14409 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வாயிலாக ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யலாம்.
இதற்கு ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள நிறுவனத்தின் பதிவாளரின் மொபைல் எண், ஜி.எஸ்.டி. போர்டலில் பதிவு செய்து இருக்க வேண்டும். மேலும் ஏற்கெனவே ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவம் தாக்கல் செய்து இருக்க வேண்டும். அத்துடன் எந்த வரியும் நிலுவையில் இருக்கக் கூடாது. தாமதக் கட்டணமோ, வட்டியோ செலுத்தி இருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளின்படி, மாதம்தோறும் குறுந்தகவல் அனுப்பி ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யலாம். அது சரி எப்படி தாக்கல் செய்வது..?
வெரி சிம்பிள்.. உங்கள் மொபைல் போனில் Sent Message பகுதியில் NIL என டைப் செய்து இடம் விட்டு, 3B என டைப் செய்து, மீண்டும் இடம் விட்டு,GSTIN டைப் செய்து இடம் விட்டு, வரி செலுத்துவதற்கான மாதத்தை டைப் செய்து, 14409 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், ஜி.எஸ்.டி. போர்டலில் இருந்து மொபைல் எண்ணுக்கு குறியீட்டு எண் வரும். இதையடுத்து CNF என டைப் செய்து இடம் விட்டு, 3B என டைப் செய்து இடம் விட்டு, குறியீட்டு எண்ணை டைப் செய்து மீண்டும் 14409 எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு எஸ்.எம்.எஸ். வாயிலாக ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யலாம்.