
சுமைதாங்கி கல் சிறப்பு கண்ணோட்டம்
தென்னூர் நடுநிலைப்பள்ளி தொன்மை மன்றம், திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து மரபை தேடி ஓர் அடி நிகழ்வில் பள்ளி முன்பு உள்ள தென்னூர் பிரதான சாலையில் உள்ள சுமைதாங்கி கல்லை பார்வையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். நூலகர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.



சுமைதாங்கி கல் குறித்து விஜயகுமார் பேசுகையில்,

சுமைதாங்கி என்பது, சுமைகளைச் சுமந்து செல்வோர் அதனைப் பிறர் துணையின்றிச் எளிதாக சுமையை இறக்கி வைப்பதற்காகக் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். சுமைதாங்கி கல் பொதுவாகப் பாதை ஓரங்களில் அமைக்கப்படுகின்றது. வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுமுன், பெரும்பாலான மக்கள் பொருட்களைத் தலைச் சுமையாகவே இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. . சுமைகளைச் சுமப்பவர்கள் தலையில், அல்லது தோள்களில் சுமப்பார்கள். அதனால் இறக்கி வைப்பதற்குரிய மேடை, தலை உயரத்துக்கும், தோள் உயரத்துக்கும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பாதைகளுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன எனினும், பொதுவாக, இளைப்பாறுவதற்கான இடங்களில் வேறு வசதிகளுடன் சேர்த்தும் இவை அமைக்கப்பட்டன. சத்திரங்கள், வழிப்போக்கர்கள் நீர் அருந்துவதற்காகவும், கைகால் கழுவிக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட குளங்கள், கிணறுகள், ஆடு, மாடுகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள், நிழல் தரும் மரங்கள், சிறிய கோயில்கள் ஆகியவற்றுடன் ஒரு கூறாகச் சுமைதாங்கியும் அமைவதுண்டு.

தற்காலத்தில், சுமைதாங்கிகள் பெரும்பாலான பகுதிகளில் மறக்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் எச்சங்களாகவே இருக்கின்றன. வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன. முக்கியமான இடங்களில் சுமைதாங்கிகளை அமைப்பது அறச் செயலாகக் கருதப்பட்டது. சுமைதாங்கிகளை அமைப்பதில் உள்ள குறியீட்டு அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருக்கொண்ட பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. பிறரது சுமைத் துன்பத்தைப் போக்குவதன் மூலம் அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் இதனால் நீங்கும் என்பது நம்பிக்கை என எடுத்துரைத்தார்.
