
திருச்சி புத்தகதிருவிழாவில் எழுத்தாளர்களின் படைப்புக்கு வாய்ப்பு!
திருச்சியில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று (12.09.2022) புத்தகத் திருவிழாவில் மாவட்ட எழுத்தாளர்களுக்கான தனி அரங்க அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் தலைமை வகித்தார். புத்தக திருவிழாவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்களது நூல்களின் 10 பிரதிகளை செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் அரங்கில் வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டது.
அரங்கில் வைக்கப்படும் எழுத்தாளர்களின் நூல்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் தள்ளுபடிக்கும், இதர விதிகளுக்கும் கட்டுப்பட்டு விற்பனை செய்யப்படும். புத்தகம் விற்பனை செய்ய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இப்பணிகளை ஒருங்கிணைக்க திருக்குறள் முருகானந்தம் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை புத்தகத் திருவிழாவில் வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் கோவிந்தசாமி இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
