
திருச்சியில் துவங்கிய புத்தக திருவிழா !
திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘செப்டம்பர் 16 – திருச்சி எழுதுபோகும் புதிய வரலாறு’ என்ற தலைப்பில் புத்தகத் திருவிழா இன்று செப்டம்பர் 16ஆம் தேதி முதல் துவங்கி 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்களின் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

இதில் 200க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் 150 க்கு மேற்பட்ட பதிப்பாளர்கள் என்று அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் மகிழ்ச்சி அடையும் வகையில் இடம் பெற உள்ளது.
இவற்றோடு விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு, கீழடி தொல்லியல் ஆய்வு, திருச்சி மாவட்டத்தின் சிறப்புகள், திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள், சிறுவர் சினிமா மற்றும் மகளிர்களுக்கான அரங்கு என பன்முகத்தன்மை கொண்ட அரங்குகள் அமைய உள்ளது.

திருச்சி மாவட்ட அறிஞர்கள் எழுத்தாளர்களுக்கு பாராட்டு என்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.
கண்காட்சி முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் 5 லட்சம் நபர்கள் ஒரு மணி நேரம் வாசிக்கும் ‘திருச்சியை வாசி” என்ற வாசிப்பு இயக்கம் நடத்தப்படும்.
புத்தகத் திருவிழாவில் இன்று 16ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, கவிஞர் நந்தலாலா, 17ஆம் தேதி வக்கீல் அஜிதா, 18ஆம் தேதி ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பாலகிருஷ்ணன், 19ஆம் தேதி எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், 20ஆம் தேதி கவிஞர் யுகபாரதி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், 21ஆம் தேதி மதுரை எம்பி வெங்கடேசன், 22ஆம் தேதி சினிமா இயக்குனர் கரு.பழனியப்பன், 23ஆம் தேதி ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ், 24ஆம் தேதி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், 25ஆம் தேதி தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத் ஆகியோர் பேசுகின்றனர்.
