
மாணவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவது புத்தகம் மட்டுமே – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் புத்தக வாசிப்பு இயக்கம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியின் தொடக்க விழா நேற்று (17/08/2022) நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார் மற்றும் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தக வாசிப்பு இயக்கம் மற்றும் மாணவர்களுக்கான நூலக செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

இதனையடுத்து மாணவர்களுடன் உரையாடிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
அனைவரும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனென்றால் நல்ல ஆலோசனைகளை வழங்குவது புத்தகம் மட்டுமே. பாட புத்தகங்களை தாண்டி பிற புத்தகங்களையும் படிக்கும் வகையில் பாட வேலைகளை வடிவமைத்துள்ளோம். இந்த நூலக செயலி மூலம் மாணவர்களுக்கு வாரம் ஒரு புத்தகம் வழங்கப்படும் அந்த புத்தகத்தை படித்து விட்டு தங்களது கருத்துக்களை விமர்சனங்களாவோ ஓவியங்களாவோ பதிவு செய்யலாம்.
மாணவர்களுக்காக “புத்தகம் படிக்கலாம் வெளிநாடு பறக்கலாம்” என்று திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் வாசிக்கும் பழக்கம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களை நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுடன் கலந்து உரையாடவும், பிற நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நூலகங்களுக்கு அழைத்துச் செல்லவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவர்களை இத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி பயன்பெறுமாறு கூறினார்.
