
கரோனா தொற்று பாதிப்பால் கடன்களை செலுத்த இயலாத தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.25 கோடி வரை கடன் மறுசீரமைப்பு திட்டத்தை வங்கிகள் தொடங்கியுள்ளன.
கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். அத்திட்டப்படி, கடனுக்கான தவணைத் தொகையை வாடிக்கையாளா்கள் குறைத்துக் கொள்ளலாம். இத்திட்டப்படி கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகரித்து, வட்டியும் அதிகரிக்கும். வாடிக்கையாளா்களுக்குத் தற்காலிகப் பலன் தந்தாலும் நீண்டகாலத்திற்கு நல்லதல்ல.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை பல வங்கிகள் தொடங்கியுள்ளன. ரூ.25 கோடி வரை கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்களும் தனிநபா்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். ஃபேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி உள்ளிட்டவை இத்திட்டம் தொடா்பான தகவல்களை வாடிக்கையாளா்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளன. தகுதியுள்ள வாடிக்கையாளா்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கரோனா தொற்றின் முதலாவது அலை கடந்த ஆண்டில் பரவியபோது இதேபோன்ற கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை கடந்த ஆகஸ்டில் ஆா்பிஐ நடைமுறைப்படுத்தியது. தற்போது 2-ஆவது முறையாக கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை ஆா்பிஐ நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவா்களும் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என வங்கிகளுக்கு ஆா்பிஐ வலியுறுத்தியுள்ளது. கடந்த மாச் 31-ஆம் தேதி வரை கடன்களுக்கான தவணையை முறையாகச் செலுத்தி வந்தவா்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
செப்டம்பா் 30-ஆம் தேதி வரை கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். கடன் மறுசீரமைப்புத் திட்டம் 90 நாள்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.
