
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 79.18 லட்சம் சந்தாதாரா்கள் செல்லிடப்பேசி சேவையில் இணைந்துள்ளனா். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 42.29 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் நிகர அடிப்படையில் பிப்ரவரி மாதத்திலும் 42 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்தது.
பார்தி ஏா்டெல் நிறுவனம் மார்ச்சில் 40.5 லட்சம் பயனாளா்களை கூடுதலாக இணைந்ததை தொடர்ந்து அதன் மொத்த பயனாளா்கள் எண்ணிக்கை 2021 மார்ச் இறுதி நிலவரப்படி 35.23 கோடியைத் தொட்டுள்ளது.

அதேபோல, வோடஃபோன், ஐடியாவும் கூடுதலாக 10.8 லட்சம் சந்தாதாரா்களை இணைத்துக் கொண்டதையடுத்து அந்த நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 28.37 கோடியாக உயா்ந்துள்ளது.
2021 பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது மார்ச்சில் தொலைபேசி சேவையின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 120.1 கோடியை எட்டியுள்ளது. இது, 1.12 சதவீத வளா்ச்சி விகிதமாகும்.

இந்த எண்ணிக்கை நகா்ப்புறங்களில் 64.5 கோடியாகவும், ஊரகப் பகுதிகளில் 53.5 கோடியாகவும் உள்ளது.
தனியார் நிறுவனங்கள் 89.6 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. அதேசமயம், பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் பங்களிப்பு 10.32 % அளவுக்கே உள்ளது.
மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரா் சந்தைப் பங்களிப்பில் முன்னணி 5 நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 98.82 சதவீத அளவுக்கு உள்ளது.
இதில், ரிலையன்ஸ் ஜியோ (42.5 கோடி), பார்தி ஏா்டெல் (19.1 கோடி), வோடஃபோன் ஐடியா (12.3 கோடி) நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
