ஆன்லைனில் கடன் வாங்கப்போறீங்களா…
இணைய வழியாகவும் பல்வேறு போலி சமூக வலைதள கணக்குகள் மூலமாகவும் பல்வேறு நிதி நிறுவனங்களின் பெயரிலும், பிரபலங்களின் பெயரிலும் பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பாதிப்படைவோர் ஏராளமானோர் உள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் உள்ள கடன் வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் பின்கார்ப் நிதி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி கடன் வழங்குவதாக முகநூலில் ஒரு விளம்பர செய்தியை பார்த்து ஏமாந்த கதை தான் இங்கே எச்சரிக்கையான வழங்கப்படுகிறது. கடன் பெற ஆசைப்பட்டு பணத்தை இழந்த அந்த நபர் நம்மிடம் கூறுகையில்,
“சமூக வலைத்தளத்தில் பஜாஜ் பின்கார்ப் நிதி நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு லோன் மேளா என்று குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று விவரங்களை குறிப்பிட்டேன். சில மணி நேரங்களில் எனக்கு போன் கால் ஒன்று வந்தது, அதில் வடமாநிலத்தைச் சேர்ந்த நபரொருவர் தனக்குத் தெரிந்த குறைந்தபட்ச தமிழைக் கொண்டு என்னிடம் பேசினார்.
நானும் அவரிடம் பேசினேன், எவ்வளவு அமௌன்ட் கடன் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார். நான் ஐம்பதாயிரம் என்றேன், உடனே, உங்களுடைய பாஸ்போட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, பான்கார்டு, 3 மாதத்திற்கான வங்கி பரிவர்த்தனை ரசீது போன்றவற்றை கேட்டார். அதையும் அனுப்பிவைத்தேன் சிறிது நேரத்தில் எனக்கு லோன் பணம் ஒதுக்கப்பட்டதாக சர்டிபிகேட் ஒன்றை அனுப்பினார். மேலும் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பிராஸஸிங் அமௌன்ட் ரூ.5,000த்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கூறி, வங்கி கணக்கு எண்ணை அனுப்பி வைத்தார். அவர் சொன்னது போலவே அந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தினேன். அன்றோடு சரி அதன் பிறகு அவர் என்னுடைய போன் அழைப்புகளை எடுக்கவே இல்லை பிளாக் செய்துவிட்டார்.
பிறகு ஆராய்ந்து பார்க்கும் போதுதான் பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்துக்கும், இந்த ஆப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெரிந்தது. நான் அணுகியது போலி கணக்கு என்று தெரிந்த பின்னரே போலி கணக்கின் கமெண்ட் பக்கங்களை பார்த்தேன். பலரும் வசைபாடி இருந்தனர். பிரபல நிதி நிறுவனத்தின் பெயரைச் சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறார் என்று அப்போதுதான் புரிந்தது”. என்றார்.
பொதுவாக எந்த ஒரு வங்கியும், நிதி நிறுவனமும் லோன் ப்ராஸசிங் தொகையை முன்கூட்டியே கேட்க மாட்டார்கள். கடனாக வரும் தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை எடுத்துக்கொண்டு தான் உங்கள் வங்கிக் கணக்கில் லோன் தொகை வரவு வைக்கப்படும். முகநூல் வழியாக யாரேனும் தொடர்பு கொண்டு பணம் கேட்டால் அது உண்மையான நபரா என்று தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.