ஆச்சர்யமூட்டும் இந்திய இசை வர்த்தகம்..! மியுசிக் பிசினஸ்….
பண்டைய காலம் தொட்டு இசை என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. இசைத் தொழில் கடந்த நூற்றான்டின் முற்பகுதி வரை வறுமையின் பிம்பமாகவே காட்சியளித்தது. இந்திய திரைத்துறை வளர்ச்சி அதை லாப வர்த்தகமாக மாற்றி அமைத்தது. இசை வர்த்தகம் நேரடி இசைத் தொழில், இசைப்பதிவு தொழில், இசை விற்பனைத் தொழில் என மூன்று விதமாக நடக்கிறது.
பல்வேறு நாடுகளின் பாரம்பரிய இசை, மேற்கத்திய இசை மற்றும் இசை சார்ந்த நவீன கருவிகளின் வருகை, துல்லிய ஒலிப்பதிவு விஞ்ஞான சாதனங்கள், கேட்கும் திறன் மெருகூட்டும் கருவிகள், இந்திய இசையை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றதோடு வலுவான வர்த்தகத்திற்கு அடித்தளமிட்டது. இந்திய இசை வர்த்தக சந்தையை உலகின் 15வது பெரிய சந்தை என ஒலிப்பதிவுத் தொழில் சர்வதேச கூட்டமைப்பு பட்டியலிட்டுள்ளது. மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இந்திய இசை சந்தை முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடும் என வர்த்தக ஆய்வுகள் கூறுகின்றன.
இன்றைய இந்திய இசை வர்த்தகத்தின் ஆண்டு புழக்கம் ரூ.4470 கோடி அமெரிக்க டாலர். 2010 ம் ஆண்டு இந்த வர்த்தகம் ரூ860 கோடி டாலர் என்ற அளவிலே இருந்தது. இந்தியாவில் 80 சதவீத இசை வர்த்தகம் திரைத்துறை வாயிலாகவே நடந்து வருகிறது. பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் தரவுகள் மற்றும் இந்திய இசை மாநாடுகளின் வருவாய் மூலம் நேரடி இசைத் தொழிலில் ரூ.2800 கோடி அமெரிக்க டாலர் வர்த்தகமும், ரெக்கார்டிங் தொழிலில் ரூ.1530 கோடி அமெரிக்க டாலர் வர்த்தகமும், ராயல்ட்டி உட்பட இசை விற்பனையில் ரூ..40 கோடி அமெரிக்க டாலர் வர்த்தமும் நடந்து வருவதாக தெரிய வருகிறது. இதில் நேரடி இசைத் தொழிலில் பிராண்ட் ஸ்பான்சர்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் வர்த்தகம் மட்டும் ரூ.1265 கோடி அமெரிக்க டாலர்.
இது தவிர கடந்த சில ஆண்டுகளாக, டிஜிட்டல் இசை வர்த்தகம் களைகட்டி வருகிறது. அதிகரித்து வரும் தொலைக்காட்சி இசை சேனல்கள், 3 ஜி, 4 ஜி, செல்போன்களின் ராக்கெட் வேக விற்பனைகள், சமூக வலைதளங்களின் வளர்ச்சி, செல்போன் இசை செயலிகள், “ஆல்பம் சாங்” மற்றும் கானா பாடல்கள் ஆதிக்கம் டிஜிட்டல் வர்த்தகத்தை வேகமெடுக்க செய்துவிட்டன.
ஆண்டுக்கு ரூ.1250 கோடி அமெரிக்க டாலர் வர்த்தகத்துடன் இந்திய டிஜிட்டல் இசை உச்சத்தில் நிற்கிறது. கடந்த நூற்றாண்டில் ஊர்த்திருவிழா கிராமபோன் பெட்டிகள் தொடங்கி வைத்த இந்திய இசை வர்த்தகத்தின் இன்றைய வளர்ச்சி, பெரும் பிரமிப்பே!
-மன்னை. மனோகரன்