பெரிய வெளிச்சம்
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் . மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது ( மத்.4 : 15 ) .
கிறிஸ்மஸ் என்றாலே வெளிச்சத்தின் பண்டிகை என்று சொல்லுவார்கள் வீடுகளில் பெரிய கடைகளில், ஆலயங் களில் எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள், ஒளிரும் நட்சத்திரங்கள், கிறிஸ்மஸ் மரம், சீரியல் லைட்டுகள் என ஒரே பிரகாசம் அதுவும் இரவு நேரங்களில் இந்த ஒளி அனைவரின் கண்களை கவரும். ஆனால் இந்த வெளிச்சம் எல்லாம் ஒரு காலக்கட்டத்திற்கு மாத்திரமே. கிறிஸ்மஸ் முடிந்தவுடன் அதையெல்லாம் எடுத்துவிடுவார்கள். இங்கு சொல்லப்படும் வெளிச்சம், எடுக்கப்படும் வெளிச்சமல்ல. நித்திய வெளிச்சமாகிய கர்த்தரே .
இருளில் இருக்கும் ஜனங்களை மீட்கக்கூடிய வல்லவர். மரண இருளின் திசையிலிருப்பவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்றால் ஏசாயா ( 60 : 2,3)ல் இதோ இருள் பூமியையும், காரிருள் இருக்கும் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார், உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள் என்பதற்கேற்ப கர்த்தர் நம்மேல் தம்முடைய வெளிச்சத்தை உதிக்கப்பண்ணி, நம்மை பிரகாசிக்க செய்வார். சூரியன் தான் உதிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் இங்கு கர்த்தர் உதிப்பார் என்றால் (மல் .4 : 2) ல் கர்த்தருக்கு பயப்படுகிற நம்மேல் நீதியின் சூரியனாகிய கர்த்தர் உதிப்பார் என கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் காலங்களில், இயேசு இந்த உலகிற்கு ஒளியாக வந்தார் என்ற உண்மையை உலகிற்கு பறைசாற்றுவோம். (யோவான் 1 : 9)ல் உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி 5 ம் வசனம் அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருள் என்பது என்ன? பாவம், சாபம், வியாதி, பிரிவினை, கடன், உலக ஆசீர்வாதத்திற்கான தடை என்றும் இருள் யாவையும் போக்கும்படியாக இயேசு இந்த உலகத்தில் வந்தார். நாம் இயேசுவிடம் வருகிறோமா? அவர் பாதத்தை தேடுகிறோமா? அவரே தஞ்சம் என்று விசுவாசிக்கிறோமா? அனைவருக்கும் எந்த நிபந்தனையுமின்றி இலவசமாக பாவமன்னிப்பை அருளுகிறார் .
சாபங்களை முறியடித்து, வியாதியினின்று விலக்கி, சமாதானத்தை அருளி, உலக பிரகாரமாக வரக்கூடிய ஆசீர்வாதங்களின் தடைகளை முறித்து, ஒவ்வொருவர் வாழ்விலும் உள்ள இருளான சூழ்நிலைகளை மாற்றி, பெரிய வெளிச்சத்தை கொடுக்க தாமே இந்த உலகில் மனிதனாய்(ஒளியாய்) பிறந்தார் . அவர் நம்மேல் உதித்த வெளிச்சத்தை பெற்று நாம் அந்த வெளிச்சத்தில் மற்றவர்களையும் வழி நடத்த நம்மை முற்றிலும் அர்ப்பணிப்போம்,
-டாக்டர் எம்.பிரதீபா, இயக்குனர், ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி