சென்னை, செப்.14- தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 உயா்ந்து மீண்டும் ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தங்கம் விலை
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என கடந்த ஜீலை மாதம் 22-ந் தேதி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே அதன் விலை பவுனுக்கு ரூ.2,200 குறைந்து காணப்பட்டது. அதன் பின்னரும் விலை சற்று குறைந்தது. இதனால் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். மீண்டும் விலை உயர்ந்து. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது விலை அதிகரிப்பதும், குறைவதுமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களாக விலையில் மாற்றம் இல்லாமலும் இருந்தது.
ரூ.54 ஆயிரத்தை தாண்டியது
இந்த நிலையில் தங்கம் விலை நேற்று திடீரென்று அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 705-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.120-ம், பவுனுக்கு ரூ.96-ம் உயர்ந்தது, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 825-க்கும், ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. கடந்த ஜீலை மாதம் 22-ந்தேதி தங்கம் விலை குறைந்த போது, ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்துக்கு கீழ் வந்திருந்தது.
அதன் பின்னர் தற்போதைய விலை உயர்வால், மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுமேலும் விலை அதிகாிக்க வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
காரணம் என்ன?
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து மெட்ராஸ் வைரம் மற்றம் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது. ”அமெரிக்கா பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்ததால், ஏற்கனவே தங்கம் விலை உயர்ந்து இருந்தது. தற்போது ஐரோப்பா நாடுகளின் மத்திய வங்கியும், வைப்பு நிதிக்கான வட்டி விதிதத்தை குறைத்து இருக்கிறது. இதனால் பெரும் முதலீட்டாளா்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பி இருக்கிறது. அதில் முதலீடு அதிகரித்திருப்பதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் உயரக்கூடும்” என்றார். தங்கம் விலையை போல வெள்ளி விலையும் அதிரடியாக உயா்ந்திருந்தது. கிராமுக்கு 3 ரூபாய் 50 காசும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.95-க்கும், ஒரு கிலோ ரூ.95 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.