இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் சோயா மீதான விலை சரிந்துள்ளதால், உள்நாட்டில் எண்ணை வித்துகள் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் சோயா வெளிச் சந்தையில் வியாபாரிகளால் குவிண்டால் 4 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதால், கடும் நஷ்டத்தை சந்தித்தனா். எனவே, உள்நாட்டில் சோயா விலையை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதேநேரத்தில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் சோயாவுக்கு நியாயமான விலையை கேட்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையில, அரசே சோயாவை கொள்முதல் செய்யவும் வலியுறுத்தி, காங்கிரஸ் சார்பில் ”கிசான் நியாய யாத்திரை”க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மத்தியப்பிரதேச மாநில அரசு சோயா மீதான குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு குவிண்டால் 4 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயா்த்துவதாக அறிவித்து, விலை நிர்ணயம் கோரி மத்தியப்பிரதேச அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதையடுத்து ஒரு குவிண்டால் சோயா பீன்ஸ் மீது குறைந்தபட்ச ஆதரவு விலையாக 4 ஆயிரத்து 892 ரூபாய் விலை நிர்ணயம் செய்தும், இந்த விலை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் மத்திய வேளாண்துறை அமைச்சா் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச அரசின் கோரிக்கையை ஏற்றே, இந்த விலையை நிர்ணயம் செய்துள்ளதாக சவுகான் தெரிவித்தார். இதனால், மத்தியப்பிரதேசம் மட்டுமின்றி, மகாராஷ்டிரா விவசாயிகளும் பயனடைவா்.