”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்.. கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்..” என்ற பழமொழி சுய தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும்.
சுயதொழில் செய்ய அடிப்படையாக இருப்பது உழைப்பு. ஒருவன் சோம்பலின்றி சொந்த தொழிலை சளைக்காமல் செய்கையில் அவனிடம் செல்வம் குவியும். அவனது சேமிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும். இத்தொழிலை கைகொள்ளும் வேளையில் அவர்கள் சதா எந்நேரமும் தொழிலை விருத்தியாக்க கவனம், சிந்தனை ஆகியவற்றை அதிகம் செலுத்துவர். அவர்கள் ஊக்கத்தோடு செய்யும் தொழிலே அவர்களின் உன்னத ஆக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம், மேம்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதை பலரிடம் நாம் காண்கிறோம்.
சொந்த தொழில் செய்வதால் தன்னம்பிக்கை, சுயகாலில் நிற்றல் ஆகிய பண்புகள் அதிகம் உருவாகும். மேலும் அத்தொழிலை செய்வதற்கு சுயமாக திட்டமிட்டு செயல்படலாம். வேலைகளின் தேர்வு, இடம், முதலீடு ஆகியவற்றை நாமே தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு.
மேலும் சொந்த தொழில் செய்வோர் நேரக்கட்டுப்பாடு பற்றி சிந்திக்க அவசியமில்லை. அவர்கள் நினைத்த நேரம் தொழிலை செய்யலாம் அல்லது செய்யும் நேரத்தை அதிகரிக்கலாம். அவர்கள் சிந்திக்க வேண்டியது உழைப்பு ஒன்றை மட்டும்தான். கொடுக்கப்படும் நேரத்திற்கு கட்டாயம் அடுத்தவருக்கு அடிமையாக அலுவல் புரிய வேண்டும் எனும் நிலை சுயதொழில் செய்வோருக்கு இல்லை.
இன்றைய நவீன உலகில் மனிதன் பல துறைகளில் அரிய முயற்சிகள் செய்து பல ஆற்றல்களை படைக்கிறான். பழங்காலத்தில் நம் முன்னோர் உடல் உழைப்பை மூலதனமாகக்கொண்டு பிறரிடம் வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால் தற்காலத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. ஒவ்வொரு மனிதனும் சுயமாக வியாபாரமோ. சுயதொழிலோ செய்து முன்னேற்றம் அடைந்து வருகிறான். ஆகவே சொந்த தொழில் செய்வதினால் நமக்கு பல நன்மைகள் கிடைத்து வருகின்றன.