அவசர மருத்துவ செலவுகள், வீடு புதுப்பித்தல் அல்லது திருமணச் செலவுகள் என எந்த அவசர செலவுகளுக்கும் உண்டான பணத் தேவைக்கு தனிநபர் கடன் பெரும் உதவியாக உள்ளது. சமீப ஆண்டுகளாக இந்தியாவில் டிஜிட்டல் கடன் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்பை விட தனிநபர் கடன் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்கிறது. எனினும், நம் தேவைகளுக்கு ஏற்ற தனிநபர் கடனை கண்டுபிடிப்பதில்தான் மிகப்பெரிய சவால் உள்ளது.

பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனிநபர் கடனை வழங்கி வரும்நிலையில், சரியான கடன் வழங்கும் நிறுவனத்தை கண்டுபிடிப்பது சிரமமான காரியம். இந்தக் கட்டுரையில் பல்வேறு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன்களை எவ்வாறு ஒப்பிட்டு பார்த்து, உங்களுக்கு தேவையான கடன் வழங்கும் நிறுவனத்தை கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்ப்போம். தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளில் சிலவற்றை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்: தனிநபர் கடன் விண்ணப்பிப்பதற்கு முன்னர் இதைதான் முக்கியமாக பார்க்க வேண்டும். கூடுதல் கட்டணம், செயலாக்க கட்டணம், வட்டி எல்லாம் சேர்த்து மொத்தத் தொகை எவ்வளவு வருகிறது என்பதை நாம் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வங்கிகளும் வெவ்வேறு வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன. நிலையான வட்டி விகிதம் என்றால், நீங்கள் கடனை முழுதாக கட்டி முடிக்கும்வரை ஒரே வட்டி விகிதம்தான் இருக்கும். அதுவே மாறக்கூடிய வட்டி விகிதமாக இருந்தால், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதமும் அவ்வப்போது மாறக்கூடும்.
கடனை திரும்பச் செலுத்தும் காலம்: நாம் வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து, முழுதாக கட்டி முடிக்கும் காலத்தையே இது குறிக்கிறது. இது உங்கள் இஎம்ஐ தொகை மற்றும் மொத்த வட்டித் தொகையை கணிசமாக பாதிக்கும். மாதந்தோறும் குறைவான இஎம்ஐ தொகை செலுத்த வேண்டுமென்றால், கடனை திரும்பச் செலுத்தும் காலம் அதிகரிக்கும். மாறாக குறுகிய காலத்தில் கடனை அடைக்க வேண்டும் என நினைத்தால், இஎம்ஐ தொகை அதிகமாக இருக்கும். உங்களுக்கு எது உதவியாக இருக்கும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
கட்டணங்கள்: தனிநபர் கடன் வழங்கும் ஒவ்வொரு வங்கிகளும் செயலாக்க கட்டணம், தாமதமாக வட்டி கட்டுவதற்கான கட்டணம், முன்கூட்டியே கடனை அடைக்கும்போது செலுத்த வேண்டிய கட்டணம் என பலவற்றை வசூலிக்கின்றன. சில நிறுவனங்கள் கடன் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை செயலாக்க கட்டணமாக வசூலிக்கின்றன. தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, தாமதமாக இஎம்ஐ செலுத்துவதால் என்ன பிரச்சனை வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
தகுதி: தனிநபர் கடனைப் பெறுவதற்கு ஒவ்வொரு நிதி நிறுவனமும் வெவ்வேறு தகுதியை நிர்ணயித்துள்ளன. முதலில் எந்த வங்கிகள், எவ்வளவு சிபில் ஸ்கோரை எதிர்பார்க்கின்றன என ஒப்பிடுங்கள். அதேபோல், கடனுக்கு விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் இவ்வளவு வருமானம் ஈட்ட வேண்டும் என நிர்ணயித்திருக்கும். இதையும் பல வங்கிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
சிறப்பு தள்ளுபடி அல்லது சலுகை: கடன் வழங்கும் சில நிறுவனங்கள் கேஷ்பேக் அல்லது குறைக்கப்பட்ட வட்டி விகிதம் என பல சலுகைகளை வழங்கும். உதாரணமாக சில வங்கிகள் வட்டி விகிதங்களில் 0.5% தள்ளுபடி அல்லது ஆண்டு கட்டணத்தில் தள்ளுபடி போன்ற சலுகைகளை அறிவிப்பார்கள். பண்டிகை திருவிழா காலங்களில் தனிநபர் கடன் பெறுவதை ஊக்குவிக்க பல சலுகைகளை வங்கிகள் அறிவிக்கும். மற்ற வங்கிகளோடு இதையும் ஒப்பிட்டு பார்ப்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.