இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் பொருட்டு. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிரத்திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட, ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் எதிர் வரும் 13.12.2025 (சனிக்கிழமை) மற்றும் 14.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் திருத்தங்கள்/இடமாற்றம் செய்யவோ விரும்பும் வாக்காளர் அல்லது தகுதியுள்ள குடிமக்களுக்கான படிவங்கள் – 6 அல்லது 8 ஆகிய படிவங்களுடன் உறுமொழிப்படிவமும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் கிடைக்கப்பெறும். இப்படிவங்களுடன் உறுதிமொழி படிவத்தினையும் பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முகவரி சான்றாக கீழ்காணும் ஆவணங்களில் எதேனும் ஒன்றினை அளிக்கலாம்.
1 ஆதார் அட்டை, முகவரிக்கான குடிநீர்/மின்சாரம்/எரிவாயு இணைப்பு ரசீது (குறைந்தது வருடத்திற்காவது), தேசிய மயமாக்கப்பட்ட/அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி/அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம், கடவுச்சீட்டு, விவசாயி புத்தகம் உட்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப்பதிவுகள். பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம் (குத்தகைதாரராக இருந்தால்). பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் (சொந்த வீடு எனில்) எதேனும் ஒன்றினை அளிக்கலாம்.
வயது சான்றாக சுய சான்றொப்பமிட்ட கீழ்காணும் ஆவணங்களில் எதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்:-
தகுதிவாய்ந்த உள்ளாட்சி அமைப்பு/நகராட்சி அதிகாரி/பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் வழங்கிய பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை (PAN Card), ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்சி/ஐசிஎஸ்சி/மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரென்டாம் வகுப்பு சான்றிதழ்கள் அதில் பிறந்த தேதி இருந்தால், இந்திய கடவுச்சீட்டு (Passport), https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தான் வசிக்கும் இருப்பிடத்தை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் பெயர்ந்தாலோ அல்லது வாக்காளரின் விபரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது இடம் பெயர்தல்/திருத்தம் /வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டியிருந்தாலோ படிவம் 8 இல் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்டுள்ள படிவங்களுடன் கண்டிப்பாக உறுதிமொழி படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்தாண்டு தேர்தல் ஆண்டு என்பதால் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



