வங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா பர்வின்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1806ம் ஆண்டு பேங்க் ஆஃப் கல்கத்தா என்ற பெயரில் வங்கி தொடங்கப்பட்டது. பேங்க் ஆஃப் பெங்கால், பேங்க் ஆப் பம்பாய், பேங்க் ஆப் மதராஸ் என்ற பெயர்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் 15 ஆண்டுகளுக்குப் பின் ஒருங்கிணைத்து இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் இயங்கியது. பின்னர் 1955 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பாராளுமன்ற சட்டத்தின்படி, இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (STATE BANK OF INDIA-SBI)) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் எஸ்.பி.ஐ.யின் வாடிக்கையாளர். அதாவது 45 கோடி வாடிக்கையாளர்கள். 23000 வங்கிக் கிளைகள். 34 லட்சம் கோடி டெபாசிட் தொகை. சுமார் 23 சதவீத மார்கெட் ஷேர். உலகின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக விளங்கிடும் எஸ்.பி.ஐ.யின் திருச்சி மண்டல மேலாளர் ஒரு பெண்.
மாவட்டத்தில் 40 கிளைகளுடன், 6500 கோடி டெபாசிட் தொகையும் 3500 கோடி கடன் தொகையுடன் இயங்கும் ஒரு வங்கியின் பிராந்திய மேலாளர் பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சொந்த ஊர் திருநெல்வேலி.
சரியான வயது வந்தவுடன் திருமணம் செய்து வைத்துவிட்டால் கடமை முடிந்தது என்ற சிந்தனையுடன் விளங்கிடும் குடும்பத்தில் பிறந்த சபீரா பர்வின், அப்பாவின் ஆதரவுடன் பி.இ.சிவில் இன்ஜினியரிங் முடித்து பின் அப்பாவை போலவே (அப்பா துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்) தானும் அரசு வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.ஏ.எஸ். தேர்விற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த போது கண்ணில்பட்ட வங்கித் தேர்வில் பங்கேற்று 19 ஆண்டுகளில் இந்தியாவிலேயே குறைந்த வயதுடைய பிராந்திய மேலாளர்களுள் ஒருவராக திகழ்கிறார் பி.சபீரா பர்வின்.
“எஸ்பிஐ வங்கியில் ஆண், பெண் என்ற பாலின பேதமெல்லாம் கிடையாது. இங்கே தகுதியை அடிப்படையாக வைத்தே பதவி உயர்வு. படிப்பில் நல்ல மதிப்பெண் வாங்கி வங்கித் தேர்வெழுதினால் எஸ்.பி.ஐ.யில் வேலை கிடைக்கும். அதே போல் வங்கியின் செயல்பாடுகளிலும் தொடர்ந்து செயல்திறன் மற்றும் பங்களிப்புகளை கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். நம்முடைய சீரிய பங்களிப்பும் செயல்திறனும் தான் நம்மை உயர்த்தும்.” என்கிறார் பி.சபீரா பர்வின்.
“வங்கித் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பின் நேர்முகத் தேர்வு டெல்லியில் நடைபெற்றது. வீட்டை விட்டு வெளியே போகவே கட்டுப்பாடு விதிக்கும் என் குடும்பத்தில் நேர்முகத் தேர்வே டெல்லியில் நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு ஊர் திரும்புவதற்குள் அப்பாயின்மெண்ட் ஆர்டர் வீடு தேடிச் சென்றது. உடனடியாக மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் Probationary Officer ஆக பணியில் சேர்ந்தேன். வங்கி செயல்பாடுகள் பற்றியெல்லாம் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. வேலைக்கு சேர்ந்த பின் புத்தகங்களை படித்தும், சக ஊழியர்களின் ஆலோசனைகளை கேட்டும்தான் வங்கி செயல்பாடுகளில் என் அறிவை வளர்த்துக்கொண்டேன்.
- உலகில் அனைத்து முன்னணி நாடுகளிலும் எஸ்பிஐ வங்கியின் கிளைகள் உள்ளது. கடந்த மாதத்தில் எஸ்பிஐ ரூ.5,00,000 கோடி வீட்டுகடன் எனும் மைல்கல் இலக்கை அடைந்து சாதனை படைத்தது.
- இந்தியாவில் சிறு, குறு தொழில்முனைவோருக்கு வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகையில் எஸ்பிஐயின் பங்களிப்பு மட்டும் 30 சதவீதம்.
- 15 நிமிடத்தில் வங்கி இணையதளம் மூலம் கணக்கு தொடங்கலாம். யோனோ ((YONO)) செயிலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 35 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
- ஏடிஎம் கார்டு இன்றி ஏடிஎம்மில் YONO CASH மூலம் பணம் எடுக்கலாம். ஆன்லைன் ஷாப்பிங் பண்ணலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து ரூ.5 கோடி வரை சிறுதொழில் வங்கி கடன் பெற முடியும்.
- திருச்சியில் எஸ்பிஐ வெல்த் ஹப் (Wealth Hub) தொடங்க உள்ளது.
பின்னர் 2001ல் எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை கிடைக்க சென்னையில் பணியமர்ந்தேன். முதல் வாய்ப்பே ரூ.1,500 கோடியிலான 30 யூனிட்டை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்தேன். SCALE- —1 தொடங்கி இப்போது SCALE– 5 இடத்தை அடைந்திருக்கிறேன். அனைத்து விதமான பணியிடங்களிலும் பணியாற்றியுள்ளேன். ஓவர்சிஸ் வங்கிப் பணியாக கலிபோர்னியாவில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியிலும் பணியாற்றிவிட்டேன். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என அனைத்து இடங்களுக்கும் தனியாகவே சென்று வந்துள்ளேன். நம் பணியில் நேர்மையாக, மனஉறுதியுடன், தைரியத்துடன் செயல்பட்டால் நாம் முன்னேறலாம் என்பதற்கு இவரே ஒரு உதாரணம்.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 250 ஏடிஎம்கள் செயல்படுகிறது. திருச்சியில் உள்ள 40 வங்கி கிளைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஏடிஎம், சிடிஎம் CASH DEPOSIT MACHINE) மற்றும் PASSBOOK PRINTING MACHINE உள்ளன. இங்கே 350 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றுகின்றனர். கொரோனா பரவல் காலத்தில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வங்கி வளாகத்திலேயே முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டோம். திருச்சி விமானநிலையத்தில் ஒரே நாளில் 511 மரக்கன்றுகளை நட்டு க்ரீன் இந்தியா திட்டத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பல்வேறு வசதிகளை எஸ்.பி.ஐ. அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 26 பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. டெபாசிட், ஏடிஎம் சேவை, வாடிக்கையாளர்களை அணுகுதல் என வங்கி செயல்பாடுகளின் அனைத்து சேவைகளிலும் தொடர்ந்து முதல் மூன்று இடங்களை எஸ்பிஐ திருச்சி பிராந்தியம் தக்க வைத்துக்கொண்டுள்ளதாக பிசினஸ் திருச்சியிடம் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்,பி.சபீரா பர்வின்.
ஸ்ரீ சக்தி பேக்கேஜ்
எஸ்பிஐ வங்கி வழங்கும் இந்தக் கடன் பேக்கேஜ் ஆனது 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் கடன் அளிக்கும். ரூ.2 இலட்சம் கூடுதலாகக் கடன் பெறும் போது 0.5 சதவீதத்தை வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படும். என்ன தொழிலுக்காகக் கடன் பெறுகிறார்கள் என்பதைப் பொருத்துச் சலுகைகள் மாறும்.