வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் – 1
வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் – 1
Rtn. F.பெலிக்ஸ் ராஜ் கட்டுரை ஆசிரியர்,
பெலிக்ஸ் ராஜ் திருச்சி, தென்னூர், சாஸ்திரி சாலையில், இமேஜ் ஹைடெக் பர்னிச்சர் கம்பெனி என்ற பெயரில் வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு தேவையான அனைத்துவிதமான பர்னிச்சர் வகைகளையும் விநியோகித்து வருகிறார்.
வர்த்தகத்தில் பொருட்கள் மட்டும் அல்லாது நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் தரமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். தொழில் மூலம் மிகச் சிறந்த சமுதாயசூழலை உருவாக்க முடியும் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை.
முதுநிலை வணிக நிர்வாகம் பயின்ற இவர், பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் உளரீதியாக பயிற்சியளிக்கும் பேச்சாளராகவும் இருக்கிறார். புத்தகங்கள் மீது தீராத காதல் கொண்ட இவர், ஒரு நாளும் படிக்காது உறங்கச் செல்வதில்லை என்கிறார்.
ரோட்டரி, பில்டர்ஸ் அசோசி யேசன், பர்னிச்சர் அசோசியேசன் போன்றவற்றில் பல்வேறு பொறுப்பு களை வகித்து வரும் இவர், அந்த அமைப்புகளின் மூலம் நிறைய சமுதாய சேவைகளையும் செய்து வருகிறார்.
ஒரு கப்பல் கடலோடும் போது புயல், சூறாவளி, கடல் கொந்தளிப்பு, கடற் பாறைகளால் ஏற்படும் பாதிப்பு என்று அதற்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம், ஏராளம். கரையில் இருக்கும் போது அதற்கு எந்த பாதிப்பும் இன்றி அழகாக, அமைதியாக இருக்கும் என்றாலும், கரையில் இருப்பதற்காக கப்பல் உருவாக்கப்படவில்லை. கடலோடினால் தான் அது கப்பல். அது போல பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் நாம் பிறந்ததற்கான ஒரு பலனை இவ்வுலகிற்கு விட்டுச் செல்பவரே சிறந்த மனிதர்.
ஒரு மனிதன் சிறந்த மனிதராவதற்கு முதல்படி, அவன் தன்னை தாண்டி யோசித்தல். ஒரு தொழில்முனைவோர் வணிகம் செய்வதன் மூலம் தன்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார். பொருட்கள் கொள்முதல், விற்பனை, வரவு செலவு மூலம் நாட்டின் பொருளாதார பண பரிவர்த்தனையை அதிகமாக்குகிறார். நாட்டின் வலுவான நிதி நிலைமைக்கு வணிகர் களால் கொடுக்கப்படும் வரியே முக்கிய வலுவாக இருக்கிறது.
சுருங்கச் சொன்னால், “நமது தனிப்பட்ட பொருளாதார வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவும், இந்த சமுதாயத்தில் நாம் நம்மை தனிப் படுத்தி அடையாளம் காட்டிக் கொள் ளவும், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நாம் ஒரு அங்கமாக திகழ வும் நாம் வணிகம் செய்ய வேண்டும்” என்பேன். நல்ல சம்பளம், நிம்மதியான குடித் தனம் என்றில்லாமல் நான் ஏன் தேவையில்லாமல் வணிகம், வியாபாரம் என ரிஸ்க் எடுக்க வேண்டும்..?
உங்கள் மனதில் எழும் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை..!
ஆனால் உங்களுக்கு ஒன்றை சொல்ல ஆசைப் படுகிறேன். தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் படித்து முடித்து வேலைக்காக போராடுகிறார்கள். ஆனால், அமைப்பு சார்ந்த 22 துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்போ சுமார் பத்தரை லட்சம் தான். இந்த பத்தரை லட்சத்தில் ஒருவராக உள்ளே நுழைந்து, தடைகளைத் தாண்டி, ஒரு நிறுவனத்தின் தலைவராகவோ, தலைமை நிர்வாக அதிகாரியாகவோ அல்லது சுய தொழில் முனைவோராகவோ உருவா வது என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் சாத்தியம்.
அந்த ஆயிரத்தில் ஒருவராக உங்களை வடிவமைப்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
வணிகம் என்றால் என்ன..?
நுகர்வோருக்கு தேவைப்படும் பொருட்களையும், சேவைகளையும் வழங்கி அவர்களின் தேவையை பூர்த்தி செய்து அதன் மூலம் பொருளீட்டுவதே வியாபாரம் அல்லது வணிகம்.
சரி நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள் தொழில் தொடங்குவதென்று..! எங்கிருந்து தொடங்கலாம்..? முடிவிலிருந்தே தொடங்குங்கள்..! ஆம்..!
அரங்கு நிறைந்த விழா அது. கடைசி இருக்கையில் அமர்ந்த ஆசாமிக்கு மேடையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. மேடையும் கொஞ்சம் மசமசப்பாகத் தான் தெரிந்தது. ஒரு வெற்றியடைந்த தொழிலதிபருக்கான பாராட்டுக் கூட்டம் அது என்பது மேடையில் கூடியிருந்த பலரது பாராட்டு உரைகளில் இருந்து தெரிந்தது.
பெரிய கோடீஸ்வரரான அந்த தொழிலதிபர், “எப்படியெல்லாம் தன் புத்தி சாதுர்யத்தாலும் வியாபார நுணுக்கத்தாலும் மேலேறி வளர்ந்து வந்தார்… கடும் உழைப்பால் முன்னேறிய அவரால் கைதூக்கி விடப்பட்டவர்கள் எத்தனை பேர்… புதிய பொருட்கள் பலவற்றின் அறிமுகம்…
நாட்டின் பொருளாதார முன்னேற் றத்தில் அவரது பங்கு” என வாழ்த்தியவர்களின் உரையைக் கேட்கக் கேட்க… கடைசி இருக்கை ஆசாமிக்குள் ஒரு தெளிவு. ஒவ்வொருவரும் பேசப்பேச மேடை தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. பாராட்டுக்கு ஆளான தொழிலதிபரின் முகம் கூட பளிச்சென்று தெரிந்தது. அட, அப்படியே அந்த ஆசாமியின் முகம். தன்னைத்தான் அவர்கள் பாராட்டுகிறார்களா என்று அசந்து போனார் ஆசாமி ! எப்போதுமே, தான் என்னவாக பேசப்பட வேண்டும் என்று க்ளைமாக்ஸிலிருந்து சிந்திக்கத் தொடங்குவோம்..!
ரூடி ஹர்ட்டானோ
பிரபலமான இந்தோனேஷிய பேட்மின்டன் வீரர். உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை எட்டு முறை வென்ற வீரர். சர்வதேச விளையாட்டுப்போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரு முறை அவர் இந்தியா வந்திருந்தார். ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு ரூடியை அழைத்து வரும் பொறுப்பு பிரகாஷ் என்ற சின்னப்பையனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பேட்மின்டன் பற்றிய நுட்பமான விஷயங்களை அவரிடம் இருந்து தெரிந்து கொள்ள லாமே என்ற ஆர்வத்தில் ரூடி தங்கியிருந்த அறைக்கு பிரகாஷ் வெகு முன்னதாகவே சென்றுவிட்டான்.
“என்னப்பா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே, சரி சரி… நான் ஸ்கிப்பிங் பண்ணப்போகிறேன், நீ ஓரமாக உட்கார்ந்து எனக்கு நம்பர் சொல் !” என்று ஸ்கிப்பிங் செய்ய ஆரம்பித்தார். ஆராயிரம் முறை ஸ்கிப்பிங் சுழற்றினார் ரூடி.
“மாட்ச் ஆடுவதற்கு முன்னால் இவ்வளவு ஸ்கிப்பிங் செய்தால் மாட்ச்சில் களைப்பாக இருக்காதா?” என்று கேட்டான் பிரகாஷ்.
“இப்படி கடுமையான பயிற்சி எடுக்காமல் மாட்ச்சுக்கு சென்றால் தான் களைப்பாகி விடும்“ என்றார் ரூடி.
‘
பிரகாஷிற்கு உழைப்பின் முக்கியத்துவம் புரிந்தது. ரூடியை பின்பற்றி கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்தான். பிற்காலத்தில் நாடே கொண்டாடும் அளவுக்கு விளையாட்டு துறையில் பல உச்சங்களை தொட்டவர் ஆனார் பிரகாஷ் படுகோன்(PRAKASH PADUKONE).
உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்று, மலேசியாவின் பெட்ரோனாஸ் கோபுரம். இந்த கோபுரத்தின் மொத்த எடையில் மூன்றில் ஒரு பங்கு தான் வெளியே நம் கண்களுக்கு தெரிகிறது. மீதி இரண்டு பங்கு பூமிக்கு அடியில் மறைந்துள்ளது. அஸ்திவாரம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதற்கு இந்த பிரமாண்டமான கட்டிடம் ஒரு சிறந்த உதாரணம்.
எந்த தொழில் செய்தால் வெற்றி பெறலாம் என்பதைவிட என்ன மாதிரியான குணாதிசயங்கள் இருந்தால் தொழிலில் வெற்றி பெற முடியும் என்பதை தான் நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
பெட்ரோனாஸ் கோபுரத்தின் நிலைத்தன்மை அதன் அஸ்திவாரத்தில் தான் உள்ளது என்ற நியதி எப்படி கட்டிடத்திற்கு பொருந்துகிறதோ அதே நியதி தான் மனிதனுக்கும்..!
மனிதனுக்குள்ள வியாபார திறமை, நிதி நிர்வாக திறமை போன்றவை எல்லாம் கண்ணுக்குத் தெரியும் பளபளப்பான கட்டிடம் போன்றவை. ஆனால், மனிதனின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இருப்பவை ஒழுக்கம், நாணயம், விடாமுயற்சி, தோல்வியை கண்டு துவளாத மனம் ஆகியவை தான் !
ரூடி, பிரகாஷ் படுகோன் போன்றவர்கள் அடித்தளம் முக்கியம் என்று புரிந்து கொண்டு அஸ்திவாரத்தை பலமாக அமைத்ததால் வெற்றி கண்டார்கள். அஸ்திவாரம் உறுதியாக இருந்தால், அதன் மீது எழுப்பப்படும் மற்ற விஷயங்களும் உறுதியாக இருக்கும் என்ற எண்ணத்தை நாமும் நம் மனதில் விதைத்து கட்டமைப்போம் புதிய அஸ்திவாரத்தை..!
பழகலாம் தொடர்ந்து!