வளம் பெருக மீட்கப்படும் வளங்கள்
தமிழகத்தின் கடன் தொகை ரூ.5,77,987 கோடியாக உள்ளது. வருவாய் பெருக்கத்திற்கு, உலகின் அனுபவம் வாய்ந்த பொருளாதார நிபுணர்களை கொண்டு பல்வேறு வழிகளையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது தமிழக அரசு.
கடந்த ஆகஸ்ட் 15, 75வது சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் முதன்மை பேரூராட்சியாக, பல்வேறு செயல்பாட்டிற்காக சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் விருது மற்றும் முதல் பரிசுத் தொகை ரூ.10 இலட்சத்தை பெற்றுள்ளது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி பேரூராட்சி.
“பல்வேறு செயல்பாட்டிற்கான” என்பதில், கல்லக்குடி பேரூராட்சி நிர்வாகம், வரு வாய் பெருக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை முதன்மையாக கூறலாம். ஒரு பேரூராட்சியின் பணிகள் அதிகபட்சமாக என்னவாக இருக்க முடியும். சுகாதார பராமரிப்பு, தெரு விளக்கு பராமரித்தல், குடிநீர் விநியோகம், பொது சொத்தை பாதுகாத்தல், பொது மக்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது போன்றவையாகும். இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செலவினங்களுக்கு அப்பகுதியி லிருந்து பெறப்படும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பேரூந்து நுழைவுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விதத்திலும் பெறப்படும் வருவாயிலிருந்தே சமாளிக்கப்படுகின்றது.
ஆனால், “அப்படியெல்லாம் மேலோட்டமாக பார்த்து வழக்கமான பாணியில் சீரமைப்பு பணிகளை, நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது” என தொலைநோக்கு சிந்தனையில் பயணம் மேற்கொண்ட கல்லக்குடி பேரூராட்சியின் செயல் அலுவலர் சா.சாகுல் ஹமீதின் செயல்பாடே இன்று கல்லுக்குடி, தமிழகத்தின் முதன்மை பேரூராட்சியாக தேர்வாக காரணமாகிறது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் சவாலாக இருப்பது சேகரமாகும் குப்பைகள். நாள்தோறும் குப்பைகள் சேகரிப்பில் உள்ள நடைமுறைகளை மேம்படுத்துவது, சாலையில், தெருவில் குப்பைகள் இல்லாமல் பராமரிப்பது என்றாலும் நிறைவில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒரு மலை போல் ஏதாவது ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு அதன் சுற்றுப்புறத்தில் பெரும் துர்நாற்றம் ஏற்பட வழிவகுக்கிறது. சேகரமாகும் குப்பைகளை எப்படியெல்லாம் அழிப்பது என்பதை மட்டுமே யோசிக்காமல் அவற்றை வருவாய் அளிக்கும் தங்கமாக மாற்றுவது எப்படி என்ற யோசனை, பல்வேறு விதத்திலும் செயல் அலுவலர் சாகுல் ஹமீதை களம் இறங்கச் செய்துள்ளது.
குப்பைகளை முதலில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொது மக்களிடமிருந்து தரம்பிரித்து வாங்கப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே சேகரமான குப்பைகளும் இதே போல் தரம் பிரிக்கப்படுகின்றன. ப்ளாஸ்டிக் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள், வாட்டர் கேன் பாட்டில்கள், எலக்டரிக் கழிவுகள், இரும்பு போன்றவைகள் பிரிக்கப்பட்டு பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கொடுத்து காசாகிறது. ப்ளாஸ்டிக் பைகள் அருகில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு வழங்கப்பட்டு எரிபொருளாகிறது. பழைய காகிதங்களும், இரும்புகளும் அதே போன்று கையாளப்பட்டு காசாகிறது. ஆதாயத்தில் 10 சதவீதம் பேரூராட்சி நிர்வாக்திற்கும் 90 சதவீதம் பணியாளர்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.
வெஜிடபிள் வேஸ்ட் எனப்படும் காய்கறி கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவற்றை மக்கச் செய்து உரமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயற்கை உரம் விவசாயிகளுக்கு கிலோ ரூ.5 என விற்பனை செய்யப்படுகிறது.
எலுமிச்சைத் தோல், சாத்துக்குடித் தோல், ஆரஞ்சுத் தோல் மற்றும் பழக் கழிவுகளை வெயிலில் காய வைத்து தூளாக்கி தயாரிக்கப்படுவது கல் பவுடர். இந்த பவுடர் வெண்கலப் பாத்திரம் துலக்கவும், முகச் சுருக்கத்தை போக்கி சருமத்தை பாதுகாக்கவும், பல்பொடியாகவும் பயன்படுகிறது. இந்த கல்பவுடர் ஒரு கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குப்பைகளில் கொட்டப்படும் முட்டை ஓடுகள் மற்றும் உணவ கங்கள் மூலம் கிடைக்கும் முட்டை ஓடுகளை சுத்தப்படுத்தி பொடியாக்கி அவற்றை செடி வளர்ப்பிற்கான உரமாக பயன்படுத்தப்படுகிறது. கல்ரோஸ் என பெயரிடப்பட்ட இதன் விலை ஒரு கிலோ ரூ.50.
மீன் சந்தையில் சேகரமாகும் மீன் கழிவுகளை பெற்று அவற்றில் கொஞ்சம் நாட்டு வெல்லம் சேர்த்து இரண்டு நாட்கள் கிளறிவிட்டு பின்னர் 22 நாட்கள் அவற்றை மூடிவைத்து நொதிக்கச் செய்து தயாரிக்கப்படுவது மீன் அமிலம். இந்த மீன் அமிலம் தண்ணீருடன் கலந்து பயிர்களில் தெளிக்க பூச்சிக்கொல்லியாகவும், பயிர்களுக்கான ஊட்டச் சத்தாகவும் பயன்படுகிறது. இதன் விலை ஒரு லிட்டர் ரூ.100.
தையல் நிலையங்களில் சேகரமாகும் துண்டு துணிகளை வாங்கி அவற்றை கால் மிதியடிகளாக தயாரித்தும் விற்கின்றனர். ஒரு மிதியடியின் விலை ரூ.50. இங்கு பயன்படுத்தப்படும் இயந்திர தளவாடங்கள் என்ஜிஓ மூலம் நன்கொடையாகவும் பெறப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. திருச்சியில் உள்ள சேவை டிரஸ்ட் மூலம் சேவை கோவிந்தராஜ் ரூ.45,000 மதிப்புள்ள இரண்டு மிதியடி தயாரிப்பு இயந்திரங்களை வழங்கியிருக்கிறார்.
இயற்கை உரம் தயாரிப்பதற்கு அடிப்படை தேவை மாட்டு சாணம். மாட்டுச் சாணத்தை விலை கொடுத்து வாங்குவதை தவிர்த்து 2 நாட்டு மாடுகள் மற்றும் காங்கேயன் காளையினை வாங்கி பராமரித்து, அவற்றிலிருந்து பெறப்படும் சாணத்திலிருந்தே இயற்கை உரங்களை தயாரிக்கின்றனர். குறிப்பாக ஜீவாமிர்தம் தயாரிப்பை சொல்லலாம்.
பசு மாட்டுச் சாணம், கோமியம், வெல்லம், கொள்ளு தானிய மாவு, வயல்வெளி மண், மருந்து கலக்காத தூய நீர் ஆகியவற்றை ஒரு தொட்டியில் 3 நாட்களுக்கு தினமும் 3 முறை கலக்கி தயாரிப்பதே ஜீவாமிர்தம். நுண்ணுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கும் இந்த ஜீவாமிர்தம், பயிர்களை நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்த ஜீவாமிர்த கரைசலும் லிட்டர் ரூ.10க்கு விற்கப்படுகிறது. உரத்திற்கு பயன்படுத்தப்படும் சாணம் போக, நேரடியாக நாட்டு மாட்டுச் சாணம் 1 கிலோ ரூ.10த்திற்கும் கோமியம் லிட்டர் ரூ.10த்திற்கும் விற்கப்படுகிறது.
இவைகளுடன் மண்புழு உரம் தயாரித்தும் மண்புழு குளியல் நீர் சேகரித்தும் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டும் முறையே கிலோ ரூ.25க்கும், லிட்டர் ரூ.5க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆடு, கோழி, புறா, வாத்து என வளர்க்கப்பட்டு அவைகள் மூலமும் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் உண்டாக்கப்பட்டுள்ளது.
இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்வதில், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எல்லாம் ஆச்சி… மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் மதிப்புறும் வகையில் விற்கப்படுகின்றன. குப்பை கிடங்காக கிடந்த இடத்தின் பெயர் இப்போது வளம்மீட்பு பூங்காவாக பெயர் மாற்றம் பெற்று, பூங்காவாகவும் மாறியுள்ளது. குறிப்பாக வருவாய் தரும் பூங்காவாக மாறியுள்ளது.
இங்கு தென்னை, மா, பலா, சப்போட்டா, மாதுளை, கொய்யா, தேக்கு என பல்வேறு மரங்கள் நடப்பட்டும், கத்திரி, அகத்தி, அரைக்கீரை, ஓமவள்ளி, பிரண்டை பயிர் வகைகள், செடி வகைகள் நட்டு வளர்க்கப்பட்டு பறித்து விற்பனை செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது. இத்துடன் விடுவதாய் இல்லை. வேறென்ன செய்யலாம்.
வளமீட்பு பூங்கா நர்சரி கார்டனாக உருப்பெருகிறது. தென்னை, மா, பலா, சப்போட்டா, மாதுளை, கொய்யா மரக் கன்றுகள் விற்கப்படுகின்றன. மூலிகை பயிர்கள் நடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் இங்கு விளையும் மூலிகை பயிர்கள் மூலம் மூலிகை எண்ணெய் தயாரிக்கப்பட்டு அவைகள் கை, கால் மூட்டு வலி, இடுப்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் தைலமாக விற்பனை செய்யப்பட்டு வருவாய் ஈட்டப்படுகிறது.
“வருவாய் ஈட்டுவதென்பது புதிதாக தயாரிப்பது, விற்பது மட்டுமின்றி செலவினங்களை குறைப்பதும் வருவாய்க்கு சமம்” என்கிறார் சாகுல் ஹமீது. குப்பைகளை சேகரிக்க வாங்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ, தினமும் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்வதற்கே நேரம் செலவிடப்படுகிறது. இதனால் மனித உழைப்பும் வீணாகிறது. இதற்கான தீர்வு சூரியஒளி மின்சாரம். ஆட்டோவின் மேற்ப்புற கூரையில் சோலார் தகடுகளை அமைத்து சோலாரில் இயங்கும் ஆட்டோவாக மாற்றினார். இதன் மூலம் சார்ஜ் செய்வதற்காக செலவிடப்படும் மின்கட்டணம் மிச்சமாகிறது. நேர விரயம் தவிர்க்கப்படுகிறது.
இத்துடன் முடிந்துவிடுவதில்லை இவரின் பணி. தமிழகத்தில், குறிப்பாக மத்திய மண்டலத்தில் ஒரு சில இடங்களில் மியாவாகி காடுகள் மற்றும் அடர்வனக் காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த ஒரு சில இடங்களில் கல்லக்குடி பேரூராட்சியும் ஒன்று.
கல்லக்குடியில், ஸ்ரீலெட்சுமி நகரில் 1.75 ஏக்கர் பரப்பளவில் அடர்வனக் காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இங்கு புளியம், புங்கன், பூவரசு, பலா, நாவல் உள்ளிட்ட 45 வகையான, 23000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. சொட்டு நீர் பாசனம் மூலம் இயற்கை உரம் பயன்படுத்தி இந்த அடர்வனக் காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் மக்கள் சுகாதாரமான காற்றுடன் கூடிய நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாகிறது” என்கிறார் பணியாளர் ரேவதி.
“அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலை மூலம் வெளிப்படும் தூசினால் ஏற்படும் சுற்றுப்புற மாசினை களைய இந்த அடர்வனக் காடு பேருதவியாக இருக்கிறது. ஏற்கனவே தூய காற்று, தூய நீர், சுகாதாரமான வாழ்க்கை, இயற்கை விவசாயம் என்ற வாழ்க்கை முறையில் தான் நாம் வாழ்ந்து வந்தோம். இவை அனைத்தும் நமது புதிய வாழ்க்கை முறையை அழித்து வருகிறது. இதைத் தடுக்கவும், நமது இழந்திட்ட வளத்தைத் மீட்பதே வளமீட்பு திட்டமாகும். நாம் புதிதாக எதையும் உருவாக்கத் தேவையில்லை. நமது முன்னோர்களே, வாழும் வாழ்க்கை முறைகளை சொல்லிக் கொடுத்து சென்றிருக்கிறார்கள். அவற்றை நாம் கடைபிடித்தாலே நோயற்ற வாழ்வு வாழலாம். இயற்கை வாழ்வு வாழ இழந்த வளத்தை மீட்க வேண்டும். அவற்றை தான் நான் நடைமுறைப்படுத்தி வருகிறேன்.
கல்லக்கடி பேரூராட்சிக்கான நிர்வாக செலவுகளை எதிர்கொள்ள வரிகளை உயர்த்தியோ கட்டணத்தை உயர்த்தியோ சரி செய்வது மட்டுமே தீர்வாகாது. மக்கள் தொகை பெருக்கம் நிர்வாக கட்டமைப்பில் மேலும் மேலும் மாற்றங்களை உண்டு பண்ணவே செய்யும். நான் தற்போது செயல்படுத்த முனையும் திட்டங்கள் பலவும் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து இந்த கல்லக்குடி பேரூராட்சிக்கான தேவை என்னவாக இருக்கும் என்பதை சிந்தித்தே நடைமுறைப்படுத்தி வருகிறேன்” என்றார்.
இதற்கு முன்பு பணி புரிந்த திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் உள்ள பொன்னம்பட்டி பேரூராட்சி, இவர் முயற்சியால் கடந்த 2017ம் ஆண்டில் சிறந்த பேரூராட்சி விருதை பெற்றிருக்கிறது. செயல் அலுவலர் ச.சாகுல் ஹமீது சென்ற இடமெல்லாம் சிறப்பு பெறுகிறது!