லக்கிபிரைஸ் அடித்தது தலேசுக்கு… மீண்டும் டாடா வசமானது ஏர் இந்தியா
கடந்த 1953-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு இந்நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கியது. ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி கடும் நஷ்டத்தில் சிக்கி தவித்தது. இதையடுத்து அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
இதையடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை ஏற்றுக் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.
ரூ.15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்கான பாகமாகும், மீதமுள்ளவை மத்திய அரசுக்கு செலுத்தப்படும் என்று விமானப் போக்குவரத்துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்தார்.
‘‘இது ஒரு வரலாற்று தருணம், நாட்டின் கொடி தாங்கும் விமான நிறுவனத்தை எங்கள் குழு சொந்தமாக வைத்து இயக்குவது ஒரு அரிய பாக்கியமாக இருக்கும். ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த விமான நிறுவனத்தை உருவாக்குவது எங்கள் முயற்சியாகும்’’ என டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.