பத்திர பதிவில் புதிய வசதி அறிமுகம் இனி 70 ஆண்டுகால ஆவணங்களை
இணையத்தில் பார்க்கலாம்..!
தமிழகத்தில் வீடு, மனை விற்பனையின்போது சொத்து தொடர்பான முந்தைய விவரங்களை அறிய வில்லங்க சான்று பார்ப்பது வழக்கம். அலுவலகப் பணிகள் கணினி மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து வில்லங்க சான்று ஆவணங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
முதற்கட்டமாக 1987ம் ஆண்டு வரை உள்ள சொத்து விவரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப் பட்டதைத் தொடர்ந்து பொது மக்கள் தங்கள் சொத்து சம்பந்தப்பட்ட விபரங்களை இணையத்தில் பார்ப் பது எளிதானது. இதை தொடர்ந்து 1.1.1975ம் ஆண்டு முதல் சொத்து குறித்த விவரங்கள் ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து கடந்த 2018 டிசம்பரில் வில்லங்க விவரங்களை இணையத்தில் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் 1975ம் ஆண்டு வரையிலான வில்லங்கத்தை எளிதாக பார்க்கவும், வில்லங்க விவரங்களை இலவசமாக தெரிந்து கொள்வதுடன் பிரதியும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. தற்போது 1975க்கு முன்னர் உள்ள விவரங்களை பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், பதிவுத்துறை செயலா ளர் உத்தரவின்பேரில் கடந்த 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்திற்குரிய சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 1950 முதல் 1974ம் வருடம் வரையில் உள்ள ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் டிசிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 2 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.