செல்வம் சேர்க்கும் ரகசியம்..!
எது செல்வத்தை சேர்த்து தரும் என முதலீட்டாளர்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள், அதிகம் சம்பாதிப்பது, அதிகம் சேமிப்பது, முதலீடு குறித்த நல்ல அறிவு, நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டுவது எனப் பலரும் பல விஷயங்களைக் குறிப்பிடுவார்கள்.
உங்களிடம் அதிக பணம் இருக்கிறது அல்லது மாதம்தோறும் வேலை அல்லது தொழில் மூலம் கணிசமான வருமானம் வந்துகொண்டிருக்கிறது எனில், அதைச் சரியாக நிர்வகிப்பதில்தான் நீங்கள் செல்வம் சேர்ப்பது, கோடீஸ்வரர் ஆவது எல்லாம் இருக்கிறது. இதற்கான அடிப்படை ஒரே ஒரு விஷயம்தான். அதை உலகில் 20% பேர்தான் பயன்படுத்தி செல்வந்தர் ஆகியிருக்கிறார்கள். அதன் பெயர் தான் கூட்டு வளர்ச்சி அதாவது, பவர் ஆஃப் காம்பவுண்டிங் ஆகும்.
இதை ரத்தின சுருக்கமாகச் சொல்வது எனில், முதலீட்டில் வட்டிக்கு வட்டி கிடைப்பது / வருமானத்துக்கு வருமானம் கிடைப்பதாகும். இதை உலகின் எட்டாவது அதிசயம் என்பார்கள். கூட்டு வளர்ச்சி மூலம் கோடீஸ்வரர் ஆவது காலத்தால் நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இந்தக் கூட்டு வளர்ச்சி மூலம் ஒருவர் செல்வந்தராவது என்பது 100% உண்மையாகும்.
சிறிய தொகை என்றாலும் தொடர்ந்து நீண்ட காலத்துக்கு இடைவிடாமல் முதலீடு செய்து வரும்போது மிகப் பெரிய தொகையாக சேர்ந்திருக்கும். கூட்டு வளர்ச்சி முறையில் அதிக வருமானம் ஈட்டி பெரும் செல்வந்தர் ஆக முடிகிறது. பவர் ஆஃப் காம்பவுண்டிங் என்பதைக் காலத்தின் பெருமதிப்பு எனக்கூட சொல்லலாம்.