குறைந்த வட்டியில் எல்.ஐ.சி பாலிசி கடன்
அவசர தேவைக்கு கடன் வேண்டுமென்றால் எல்.ஐ.சி பாலிசியை வைத்தும் கடன் பெற முடியும். அதற்காக சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்:
3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியில் பிரீமியம் கட்டுபவர்கள் மட்டுமே கடன் பெற தகுதியானவர்கள். பாலிசியின் தொகை, காலம் இவற்றை பொறுத்து எவ்வளவு கடன் தொகை என்பது நிர்ணயிக்கப்படும். இந்த கடனுக்கான வட்டி விகிதம் மற்ற கடன் திட்டங்களை காட்டிலும் குறைவே. ஏனெனில் எல்.ஐ.சி.க்கு இது பாதுகாப்பான கடன் ஆகும். எல்.ஐ.சி. பாலிசியை வைத்து கடன் பெறுவதற்கு முதலில் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பம் எல்.ஐ.சி.யின் வலைத்தளத்தில் கிடைக்கும். மேலும் அலுவலகத்திலும் ஏஜென்டிடமும் கூட இந்த விண்ணப்பம் கிடைக்கும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை உரிய எல்.ஐ.சி. கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் பெறும் நபர் தனது ஒர்ஜினல் பாலிசி நகலை எல்.ஐ.சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். பாலிசி கடன்களுக்கான வட்டி விகிதம் 10 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதை 6 மாதத்திற்கு ஒரு முறை கட்ட வேண்டும். பாலிசி ஒப்படைக்கப்படும் காலத்தின் மொத்த மதிப்பில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பாலிசிக்கான கடன் தொகை வழங்கப்படுகிறது.
கடன் தொகை வழங்கிய நாளில் இருந்து குறைந்தபட்ச கடன் காலம் 6 மாதங்களாகும். இந்த காலத்திற்குள் கடனை கட்ட விரும்பினால் குறைந்தபட்ச வட்டியை கட்ட வேண்டும். கடன் வாங்கிய 6 மாத காலத்திற்குள், பாலிசி முதிர்வு பெற்றாலோ அல்லது பாலிசிதாரர் மரணம் அடைந்தாலோ அந்த தேதி வரை மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். வட்டி கட்ட தவறினால், கோரிக்கை தொகையில் இருந்து கடன் தொகையும் வட்டியும் கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை உரிமை கேட்போரிடம் அளிக்கப்படும். விண்ணப்பித்த 3 நாட்களில் கடன் கிடைக்கும் என்பது முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும். மற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தைவிட இது குறைவான வட்டி விகிதம் என்பதால் பாலிசி உள்ளோர் இந்த கடன் திட்டத்தை தேர்வு செய்யலாம்.