பெண்களுக்கேற்ற குடிசைத்தொழிலில் 30 ஆயிரம் வருமானம்
நூடுல்சை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் விருப்பம். அதனால்தான் நூடுல்ஸ் உற்பத்தியும் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து விற்பவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற குடிசைத்தொழில் இது. குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.
சோயா, கம்பு, தக்காளி, கீரை, ராகி என பல்வேறு வகை நூடுல்ஸ்களை தயாரிக்கலாம்.நூடுல்ஸ் தயாரிப்பதற்கான பயிற்சியை சில தொழில்ஆலோசனை நிறுவனங்கள் வழங்குகின்றன. இங்கே சென்று பயிற்சி எடுப்பதோடு அவர்களின் ஆலோசனையையும் பெறலாம்.
நூடுல்ஸ் தயாரிப்பதற்கான மாவை பதப்படுத்தும் இயந்திரம், வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகிய மிஷின்கள் வேளாண் பல்கலைகழகத்தின் வணிகமேம்பாட்டு மையத்தில் கிடைக்கும். அல்லது முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைக்க ஆர்டர் கொடுத்தும் வாங்கலாம்.
எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை பரவலாக அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிறது. கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த விலைக் கடைகளில் மாவாக வாங்கிக்கொள்ளலாம். அல்லது விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.
இத்தொழிலுக்கு குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு முதலீடாக ரூ 2.50 லட்சம் தேவைப்படும். ஒரு மாதத்திற்கான நடைமுறைச்செலவுக்கு ரூ 2 லட்சம் தேவைப்படலாம். குறைந்தபட்சம் 500 சதுர அடி இடம் தேவை. குறைந்தது 4 ஆட்கள் வேலைக்கு தேவை. செலவுகள் போக மாதம் ரூ 30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். மணம், சுவை, தரம் இருக்கும்படி நூடுல்சை தயாரித்தால் தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
சில்லரை வியாபார கடைகள், மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், பிராண்டட் நிறுவனங்கள் போன்ற இடங்களில் மொத்தமாக விற்பனை செய்யலாம்.