எப்போதும் பாசிட்டிவாக இருங்கள்…
தான் ஓர் அறிவாளி என்று கர்வம் கொண்டு ஒருவன் செயல்பட்டு விட்டால் மட்டும் வாழ்க்கையில் ஜெயித்துவிட முடியாது. அப்படி ஒருவன் ஜெயித்ததற்கான சான்று எதுவும் வரலாற்றில் கிடையாது. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது தான் தன்னம்பிக்கை.
பல அறிவாளிகள் தன்னம்பிக்கை இல்லாமல் அவநம்பிக்கை கொண்டு வாழ்க்கையில் தோற்றுப்போகிறார்கள். குறைவான அறிவை வைத்துக்கொண்டு தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற மனிதர்கள் இந்த உலகில் ஏராளம். வாழ்க்கை என்பது வாய்ப்புகளும் சமரசங்களும் நிரம்பிய களம். அந்தக்களத்தில் வெற்றி பெறுவது அவரவர் அணுகு முறையைப் பொறுத்து அமைகிறது.
கத்தியை பயன்படுத்தி… கத்தியை ஆளைக் கொல்வதற்கும் பயன்படுத்தலாம், அறுவைச் சிகிச்சை செய்து ஆளைக் காப்பாற்றுவதற்கும் பயன்படுத்தலாம். தன்னம்பிக்கை உள்ளவன் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறான். அவநம்பிக்கை கொண்டவன் கொலை செய்யப் பயன்படுத்துகிறான்.
தன்னம்பிக்கையாளர்கள் ஜெயிக்க… எங்கெல்லாம் மாற்றமும் முன்னேற்றமும் நிகழ்கிறதோ அங்கெல்லாம் அவற்றை ஒரு தனிமனிதர் ஏற்படுத்தியிருப்பார். அந்த தனி மனிதர் எதைக் கொண்டு சாதித்தார் என்று ஆராய்ந்து பார்த்தால், அவரது உள்ளத்தில் தன்னம்பிக்கை குடிகொண்டிருப்பது தெரியவரும். தன்னம்பிக்கையாளர்கள் அதிர்ஷ்டத்தால் வெற்றி பெறுவதில்லை. அளவுக்கதிகமான பயிற்சியும் முயற்சியும் அவர்களை வெற்றியாளர்களாக்குகின்றன.
தற்கொலைக்கு காரணம்… உலகில் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த தற்கொலைக்கு காரணம் என்ன?.. அவநம்பிக்கைதான் காரணம்.. எதிர்காலம் குறித்த அச்சம் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. ஆனால் தன்னம்பிக்கையுள்ள மனிதர்கள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள்.
சிறப்பு திறனாளிகள் : “ஒவ்வொரு மனிதனும் அவமானப்படும்போது துவண்டு போகாமல் எழ வேண்டும். பார்வையற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைப்பதைத் தவிர்த்து சிறப்புத் திறனாளிகள் என்று அழைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு எதிரான சவால்களை எதிர்த்து சாதிக்கிறார்கள்.
தாய்மொழி சிறப்பு : தாய்மொழியை சரியாக பேசக் கற்றுக்கொள்வது தன்னம்பிக்கை அளிக்கும். பெற்றோரும், ஆசிரியர்களும் தமிழ்மொழியின் சிறப்பு எழுத்துக்களை சரியாக உச்சரிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். கல்வி, ஒரு மனிதனுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை அளிக்கும். ஒவ்வொரு செயல்களையும் மீண்டும், மீண்டும் முயற்சிக்கும் போதுதான் அது சிறப்படையும்.
வெற்றிக்கான பண்பு அதிகரிக்க…. ஒவ்வொருவரது வெற்றியும் தோல்வியும் அவரவர் மனநிலையை பொறுத்தே அமைகிறது எனஉளவியல் வல்லுனர்கள்குறிப்பிடுகிறார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் போதுவெற்றிக்கான பண்புகள்அதிகரிப்பதாகவும், தன்னம்பிக்கை குறையும்போது தோல்விக்கான பண்புகள் அதிகரிப்பதாகவும் உளவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
சுருக்கமாகக் குறிப்பிடுவதானால் தன்னம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் காப்புறுதியாக அமைகின்றது. எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு அல்லது ஒரு வெற்றியாளனாக மாறுவதற்கு முதலில் இருக்கவேண்டியது மன உறுதியே.அதாவது தன்னம்பிக்கையே.