இசையின் பல பிரிவுகளில் சாதிக்கும்
திருச்சியின் இளம் பெண்…!!!
“என் மகள் லிண்டா ஜார்ஜ். நீங்கள் அவளை இப்போது பார்க்கும் போது மிக மிக அமைதியானவள் போல் உங்களுக்குத் தோன்றும். அவள் அப்படியல்ல. இசை மேடைகளில் லிண்டா ஜார்ஜ் ஏறி விட்டால் போதும். அப்போது அவள் முற்றிலும் வேறு பெண்ணாக மாறி விடுவாள். வீறு கொண்ட வேங்கையாக அவள் ஆகி விடுவாள். எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். இசையின் பல்வேறு பிரிவுகளில் அவள் வெற்றிக் கொடி நாட்டி வருவதற்கு அந்த வீச்சும் அவளது ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வுமே காரணம் என்று நினைக்கிறேன்.” எனக் கூறுகிறார் அவரது அம்மா லீமா ரோஸ். இசையின் பல்வேறு பிரிவுகளில் சாதனை நிகழ்த்தி வரும் லிண்டா ஜார்ஜ்க்கு வயது பதின்மூன்று.
அவரது அம்மா லீமா ரோஸ், திருச்சி பாய்லர் ஆலை மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணி புரிந்து வருகிறார். லிண்டா ஜார்ஜ், திருச்சி காட்டூர் MONTFORT SCHOOL (CBSE)ல் எட்டாம் வகுப்பு படிக்கிறார். அவரது வீட்டில் நாம் லிண்டா ஜார்ஜ்ஜிடம் நேரில் பேசினோம்.
அங்குசம் – இசை மீது தான் உங்களுக்கு ஆர்வம் என்பதனை உங்கள் அம்மா எப்போது உணர்ந்து கொண்டார்?
லிண்டா ஜார்ஜ் – மூன்று வயதாக இருக்கும் போது வீட்டில் ஹாலில் டிவி பார்ப்பார்கள் எல்லாரும். அது பக்திப் பாடலா சினிமா பாடலா எதுவாக இருந்தாலும் நான் மனம் ஒன்றிக் கேட்பேன். பாடலைக் கேட்டு விட்டு நான் பக்கத்து அறைக்குச் சென்று, அதே பாடலை நான் பாடிக் கொண்டிருப்பேன். “கொஞ்சம் கூடப் பிசிறில்லாமல் நல்லா பாடுறியே லிண்டா.” என்று பின்புறமாக வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுவார் என் அம்மா. அது தொடர்ந்தது. ஒரு வேளை என் அம்மா அப்போது தான் உணர்ந்திருக்க வேண்டும்.
அங்குசம் – பின்னர் என்ன நடந்தது?
லிண்டா ஜார்ஜ் – இங்கு பாய்லர் ஆலையில் சரஸ்வதி வித்யாலயா இசைப்பள்ளி உள்ளது. அப்புறம் என்ன? மூன்று வயதில் வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ள அங்கு என்னைச் சேர்த்து விட்டார் என் அம்மா. மாலை ஐந்து முப்பது முதல் ஆறு முப்பது மணி வரை எனக்கு வகுப்பு. மூன்று வயதில் இருந்து, அங்கு தொடர்ந்து இப்போது வரை சென்று வாய்ப்பாட்டு கற்றுத் தேர்ந்து வருகிறேன். தொடக்கத்தில் இருந்து திருமதி ரமா நாராயணன் என்பவரிடம் முறைப்படி கற்று வந்தேன். எட்டு வயதில் இருந்து ருக்மணி ஸ்ரீகிருஷ்ணா அவர்களிடம் தொடர்ந்து சிஷ்யையாகக் கற்று வருகிறேன். அதன் விளைவு என்ன தெரியும்ங்களா? சுற்றிலும் உள்ள கோயில்களில் விழாக் காலங்களில் அங்கு பக்திப் பாடல்கள் பாடி வருகிறேன். “கண நாதனே… குண போதனே…” என்று விநாயகர் அகவல் பாடல்களைப் பெருங்குரலெடுத்து நான் பாடத் தொடங்கினால், குழுமியிருக்கும் அனைவரும் மனம் உருகிக் கேட்பார்கள்.
அங்குசம் – அதனைத் தொடர்ந்து இசையில் என்ன கற்றுக் கொண்டு வருகிறீர்கள்?
லிண்டா ஜார்ஜ் – ஐந்து வயதில் மேற்கத்திய சங்கீதம் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். திருச்சி இராமலிங்க நகரில் கிரசென்ட்டோ இசைப் பள்ளி. அங்கு என் மாஸ்டர் ஜோனத் பாக்கியன் சீலன். இந்தப் பள்ளி ஆனது, லண்டனில் இயங்கி வரும் ட்ரினிட்டி காலேஜ் மியூசிக் லண்டன் என்கிற இசைக் கல்லூரியுடன் இணைந்தது ஆகும். அதிலும் நான் இணைந்து மேற்கத்திய சங்கீதம் பயிற்சி பெற்று வருகிறேன். அதில் எட்டு கிரேடுகள் சான்றிதழ்கள் கொண்ட இசைப் பயிற்சி மற்றும் படிப்பு ஆகும். மேற்கத்திய சங்கீத இசைப் பாடல்கள் ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் நிறைய இருக்கும். நான் அவைகளில் ஸ்பானிஷ் தவிர மேற்கண்ட நான்கு மொழிகளிலும் மேற்கத்திய சங்கீத இசைப் பாடல்களைப் பாடி ஆறு கிரேடு வரை தேர்ச்சி பெற்றுள்ளேன். ஒவ்வொரு கிரேடுக்கும் தேர்வு எப்படி எங்கே நடக்கும்? உலகில் பல நாடுகளிலும் அதனதன் மையங்களில் நடக்கும். ஒவ்வொரு கிரேடு தேர்வின் போதும் லண்டனில் இருந்து அதன் தேர்வாணையர்கள் இங்கு வருவார்கள். அவர்கள் முன்பாக நாம் பாட வேண்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட பாடலின் இசைக் குறிப்பு நோட்ஸ்களையும் நாம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த இரண்டையும் இணைத்துத் தேர்ச்சி பெற்றுத் தான் ஒவொரு கிரேடு சான்றிதழும் நாம் பெற வேண்டும். இப்போது எனக்கு ஏழாவது கிரேடு பயிற்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஒரு ஆண்டுக்குள் ஏழு, எட்டு ஆகிய இரண்டு கிரேடுகளிலும் தேர்ச்சி பெற்று விடுவேன்.
அங்குசம் – சரி. சரி. அதனைத் தொடர்ந்து?
லிண்டா ஜார்ஜ் – ஏழு வயதில் ஹிந்துஸ்தானி சங்கீதம். பாய்லர் ஆலை சரஸ்வதி வித்யாலயா இசைப் பள்ளி. அங்கு தொடக்கத்தில் அயந்திகா மிஸ்சிடம் கற்றுக் கொண்டேன். கஜல் பாடல்களை ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பள்ளியான கே.எம்.ஸ்கூல் வாயிலாக தினசரி மாலை நாலரை முதல் ஐந்தரை மணி வரை ஆன்லைன் மூலமாகப் பயிற்சி. இதனைக் கேட்டால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். பள்ளி நாலரை மணிக்கு முடியும். பள்ளி கேட் தாண்டி வந்து காரில் ஏறுவேன். அதன் ஆன்லைன் பயிற்சி தொடங்கி விடும். வீடு வந்து சேர்கின்ற அரை மணி நேரம் வரைக்குமாக காரிலேயே பயிற்சி வகுப்பு. வீட்டுக்குள் நுழைந்தவுடன் தொடர்ந்து அரை மணி நேரப் பயிற்சி வகுப்பு.ஆகக் கார் பயணத்தில் பாதி. வீடு வந்ததும் பாதி. இது திங்கள், வெள்ளி கிழமைகளில் மட்டுமே. இந்தப் பயிற்சி இன்றும் தொடர்கிறது.
அங்குசம் – ம்.. ம்… அப்புறம்??
லிண்டா ஜார்ஜ் – எட்டு வயதில் இருந்து கேரளாவின் மலையாள இசையமைப்பாளர் ரெஞ்சித் வாசுதேவ் என்பவரிடம் ஆன்லைன் வகுப்பு மூலமாக தினசரி இரவு எட்டு முதல் ஒன்பது மணி வரைக்குமாக லைட் மியூசிக் பாடல்கள் கற்று வருகிறேன். ஐந்து ஆண்டுகளாக வீட்டில் பியானோ வாசிக்கக் கற்றும் வருகிறேன். மூன்றாண்டுகளாக ஆன்லைன் மூலமாக சென்னை நடராஜன் என்பவர் கற்றுத் தந்து வருகிறார்.
நிறைய சேனல்களில் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நிறைய மெடல்கள் பெற்றுள்ளேன். சாரதாஸ் ஜவுளி நிறுவனம் நடத்திய ஏழு ஸ்வரங்கள் போட்டியில் கர்னாடக வாய்ப்பாட்டு பாடுவதில் மூன்று ரவுண்டுகளிலும் வென்று டைட்டில் வின்னராக விருது பெற்றேன். நம்பிக்கை டிவி தேவராகம் பாடலில் டைட்டில் வின்னர். உலக அளவில் 2௦2௦ல் குரலிசைப் போட்டி. ஆன்லைனில் நடந்த அந்தப் போட்டியிலும் நான் தான் வின்னர்.
அங்குசம் – இசையில் பல பிரிவுகளிலும் பயிற்சி பெற்று, அந்தப் பல பிரிவுகளிலும் இப்போது நீங்கள் நிகழ்த்தியுள்ள சாதனை தான் என்ன?
லிண்டா ஜார்ஜ் – கடந்த மே மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் அகில பாரதீய ஸன்ஸ்குருதிக் சங் அமைப்பானது தேசிய அளவில் கலைப் பண்பாட்டுத் துறை சார்ந்து தேசிய அளவிலான திறமையாளர்களுக்கானப் போட்டிகளை நடத்தியது. 2௦22 மே மாதம் 21 தேதி முதல் 3௦ தேதி வரை பத்து நாட்கள் அந்தப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு சார்பாகக் கலந்து கொண்ட பலரில் லிண்டா ஜார்ஜ் என்கிற நானும் ஒரு நபர் ஆவேன். அதில் மட்டுக்ம் அகில இந்திய அளவில் ஐந்து போட்டிகளில் பங்கேற்று அந்த ஐந்து வகையான இசைப் பிரிவுகளிலும் வெற்றி பெற்று வந்துள்ளேன் நான். நாட்டுப்புறப் பாடல்களில் தேசிய அளவில் முதல் பரிசு. தேசிய பாடல்களில் முதல் பரிசு, மெல்லிசைப் பாடல்களில் இரண்டாம் பரிசு. கர்நாடக இசைப் பாடல்களில் இரண்டாம் பரிசு. கர்னாடக இசையும் மெல்லிசையும் இணைந்து பாடிய பாடல்களில் மூன்றாம் பரிசு. ஆக மொத்தம் நான் ஒரு நபரே அகில இந்திய அளவில் ஐந்து பரிசுகள் பெற்று வந்துள்ளேன்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருந்து வந்திருந்தனர். அகில்;இந்திய அளவில் ஒரு நபரே இத்தனை பரிசுகளா என்று எல்லோரும் வியந்து பார்த்தனர். இத்தனைக்கும் நான் கலந்து கொண்டது பதின்மூன்று வயதுக்கு மேல் பதினெட்டு வயதுக்கு உரிய ஜூனியர் பிரிவு போட்டிகள். அதில் கலந்து கொண்டவர்களில் பதின்மூன்று வயது பெண் நான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நான் பங்கேற்ற போட்டிகளில் இசையின் பல பிரிவுகளிலும் தமிழ் மொழியில் தான் பாடல்களைப் பாடினேன் என்பது மேலும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலமாக நான் சர்வதேச அளவிலானப் போட்டிகளுக்குத் தேர்வாகி உள்ளேன். ஆம். வருகிற ஆகஸ்ட் மாதம் 13 முதல் 16 தேதி வரை நான்கு நாட்கள் சர்வதேச அளவிலான இசைப் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளன. அந்தப் போட்டிகளில் பங்கேற்க இந்திய அளவில் நான் தேர்வாகி உள்ளேன்.
சரி… இசை எல்லாம் ஓகே. அடுத்து படிப்பு எப்படி என்று தானே கேட்க வருகிறீர்கள்? அதற்கும் நானே சொல்லி விடுகிறேன். எல்கேஜி முதல் தற்போது எட்டாம் வகுப்பு வரை திருச்சி காட்டூர் MONTFORT SCHOOL (CBSE)ல் தான் படித்து வருகிறேன். எல்கேஜி முதல் ஏழாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களிலும் நான் தான் பள்ளியின் முதல் மாணவி. வரும் ஆகஸ்ட் மாதம் துபாயில் நடைபெற இருக்கும் சர்வதேச அளவிலான இசைப் போட்டிகளில் பல பிரிவுகளிலும் வென்று வர வேண்டும் என்பது தான் எனது லட்சியம்.
வாழ்த்துகள்…. லிண்டா ஜார்ஜ்…!!!
@ ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.
.