இயன்முறை மருத்துவ முகாமில் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால் வரக்கூடிய நோய்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு
இயன்முறை மருத்துவ முகாமில் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால் வரக்கூடிய நோய்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு
55 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வாசவி கிளப் கப்புல்ஸ் திருச்சி சார்பில் நடைபெற்ற இயன்முறை மருத்துவ முகாமில் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால் வரக்கூடிய நோய்கள் குறித்து இயன் முறை மருத்துவ சொற்பொழிவு நூலகத்தில் நடைபெற்றது. நூலகர் புகழேந்தி வரவேற்றார். வாசவி கிளப் எலைட் கப்பிள்ஸ் திருச்சி தலைவர் தனபால் செயலர் திவ்யா வீரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். இயன்முறை மருத்துவர் பாலாஜி உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால் வரக்கூடிய நோய்கள் குறித்து பேசுகையில்,
இன்றைய வாழ்வியல் மாற்றம் காரணமாக இளைஞர்களுக்கு கூட சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. உடல் உழைப்பு குறைவு, அதிக அளவில் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாமை, மது, சிகரெட் பழக்கம் என நாம் செய்யும் தவறுகள் நம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.

உடல் உழைப்பு குறைவதால் அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு வயிறு, தொடை, இடுப்பு என உடலின் பல பகுதிகளில் சேமிக்கப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரிக்கிறது. இதய நோய், சர்க்கரை நோய் எனப் பல பிரச்னைகளுக்கு இது காரணமாகி விடுகிறது.
உடல் உழைப்பு குறைவு காரணமாக உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. இதனால் இன்சுலின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் நிலை வந்துவிடுகிறது. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டால் கண் தொடங்கி, பாதம் வரை பல்வேறு பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்னை ஏற்படும். உடல் உழைப்பு குறைவால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்களின் சுற்றளவு குறைகிறது. ரத்த ஓட்டம் குறைவதுடன், ரத்த நாளங்களின் விரிந்துகொடுத்து பழைய நிலைக்கு திரும்பும் தன்மை பாதிப்படைகிறது. இதன் காரணமாக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து இதய நோயும் வந்துவிடும். ரத்த நாளத்தில் கொழுப்பு படிவதால் அதன் சுற்றளவு குறைந்துவிடுகிறது. இதனால் உடல் உறுப்புகளுக்கு போதுமான அளவு ரத்தம் சென்று சேருவது தடைபடுகிறது. இந்த சூழலை எதிர்கொள்ள இதயம் கூடுதலாக வேலை செய்ய வேண்டி வருகிறது. இதனால் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படும். ரத்த நாளங்கள் அளவு குறைதல், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவை மூளை ரத்த நாளங்களில் விரிசல், வெடிப்பை ஏற்படுத்திவிடலாம். மூளைக்கு போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் அவை இறக்க ஆரம்பித்துவிடும். இதனால் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம்.ஆகையால் ஒவ்வொருவரும் சமச்சீரான உணவினையும் சீரான உடற்பயிற்சிமியும் மேற்கொள்ள வேண்டும் இயன்முறை மருத்துவம் என்பது உடல்நலம் பேணும் தொழில்களில் தனிநபர்கள் வாழ்நாள் முழுமையும் தங்கள் உறுப்புகளின் இயக்கத்தையும் பயன்பாட்டையும் மீட்கவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகின்ற மருத்துவத்துறையாகும். வயது, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது அளிக்கப்படும் மருத்துவ முறைகளைக் கொண்டது என்றார்.