பெட்டி கடைகடைகாரர்களுக்கு அடிக்குது யோகம்
“இனி சிகரெட் சிங்கிளா வராது… பாக்கெட்டாதான் வரும்”
புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை தவிர்க்கும் வகையில் கடைகளில் சிகரெட்டுகளை சில்லறையாக விற்பதற்கு மத்திய அரசு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
“புண்பட்ட மனதை புகையை விட்டு ஆற்று” என்று கிராமப்புறங்களில் கலோக்கியலான பழமொழி ஒன்று கூறப்படும். அதாவது மனசோர்வில் ஒருவன் இருக்கும்போது ஒரு சிகரெட் புகைத்தால் புத்துணர்வு வரும் என்ற பொருள் வரும்படியாக இந்த பழமொழியை விளையாட்டாக அனைவரும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தால் புண்பட்டது மனதல்ல… அந்தப் புகையே.. புண்பட்டு விட்டது… என்பதை போகப்போக நாமே உணர முடியும்.
புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறவும் , புகை பிடிப்பதால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை தவிர்க்கும் வகையிலும் புகையிலை பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் புகையிலை தயாரிப்பு பொருள்கள் விற்பனை தடை செய்யப்பட்டு அதையும் மீறி விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
என்றாலும் புகையிலை பொருட்கள் வெவ்வேறு வடிவங்களில் விற்பனையில் இருந்து கொண்டே தான் இருக்கின்றன .இதில்
புகையிலை பொருள்களின் முக்கிய தயாரிப்பான சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இதனால் ஏற்படும் வியாதிகளால் மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதனை சுட்டிக்காட்டி உள்ள உலக சுகாதார நிறுவனம் அந்தந்த நாடுகள் புகைப்பிடிப்பவர் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய குறுக்கு வழி ஒன்றை தேர்வு செய்துள்ளது.
அந்த குறுக்கு வழியின் படி கடைகளில் இனிமேல் சில்லறை விற்பனையில் ஒரு சிகரெட் , இரண்டு சிகரெட் என்று வாங்க முடியாது.
சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் பாக்கெட், மற்றும் பண்டல்களாக தங்கள் நிறுவன தயாரிப்புகளை மொத்த டீலர்களுக்கு அனுப்புகின்றனர், மொத்த டீலர்கள் சில்லறை வியாபாரிகளுக்கு அனுப்புகின்றனர். சில்லறை வியாபாரிகள் தங்கள் கடைக்கு வரும் கஸ்டமர்களுக்கு ஒரு பாக்கெட் அல்லது இரண்டு பாக்கெட் என்று பாக்கெட் கணக்கிலும் ஒரு சிகரெட் இரண்டு சிகரெட் என்று சில்லறையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
பாக்கெட் கணக்கில் விற்பனை ஆவதை விட சில்லறையில் விற்பனையாகும் சிகரெட்டுகள் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர் தன் கையில் இருக்கும் இருப்புக்கு ஏற்ப
ஒரு சிகரெட், இரண்டு சிகரெட் என வாங்கி செல்கின்றனர். இது போன்ற சிங்கிள் சிகரெட் வாங்குவதை வரைமுறைப்படுத்தினால் புகை பிடிப்பவர் எண்ணிக்கை குறையும் என்று மத்திய அரசு கணக்கிடுகிறது.
இதையடுத்து ஒற்றை சிகரெட்டுகள் விற்பனை செய்வதை தடை செய்வதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதற்கு காரணம்…
புகைப் பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றை சிகரெட்டுகள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. புகையிலை ஒழிப்புக்கான முயற்சிகள் அனைத்தையும் ஒற்றை சிகரெட்டுகளின் விற்பனை கெடுத்துவிடுவதாகவும் நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. ஒற்றை சிகரெட்டுகளை தடை செய்வது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள புகைப்பிடிக்கும் பகுதிகளை (Smoking Zones) நீக்கிவிட வேண்டும் எனவும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
என்ன நடக்கும்??
இவ்வாறு நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்தால், ஒற்றை சிகரெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படலாம். ஏற்கெனவே மூன்று ஆண்டுகளுக்கு முன் சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரை அடிப்படையில் மின்னணு (இ-சிகரெட்) சிகரெட்டுகளுக்கு அரசு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார நிறுவன எச்சரிக்கை
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களால் புற்றுநோய் பாதிப்பு அபாயமும் இருக்கிறது. எனவே, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும் என உலக சுகாதார மையம் இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தற்போது பீடிகளுக்கு 22 சதவீதம்,சிகரெட்டுகளுக்கு 53 சதவீதம் புகையிலைக்கு 64 சதவீதம், ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. புகையிலை பொருட்களுக்கு 75 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கும்படி இந்தியாவுக்கு உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 91.60 லட்சம் ஆகும். இதில் இதய நோய்களால் 25.66 லட்சம் (28%) பேர், சுவாச நோய்களால் 11.46 லட்சம் (12%) பேர், புற்றுநோயால் 9.20 லட்சம் (10%) பேர், நீரிழிவு நோயால் 3.49 லட்சம் (4%) பேர், பிற தொற்றா நோய்களால் 10.65 லட்சம் (11%) பேர் இறந்தனர்.
ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease – COPD) ஆகியவை தான் இந்தியாவில் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் சுவாச நோய்களாக உள்ளன. சுவாச நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் 113 பேர் சுவாச நோய்களால் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர்.
தொற்றா நோய்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அதிக அளவில் கட்டுப்படுத்தக் கூடியது புற்றுநோய் தான். அதற்கான நடவடிக்கைகள் கூட இந்தியாவில் எடுக்கப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆண்களை வாய்ப் புற்றுநோய், குரல்வளை புற்றுநோய் ஆகியவை தான் அதிகம் தாக்குகின்றன. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் ஆகியவை அதிகம் ஏற்படுகின்றன. பொதுவாக புற்றுநோய் ஏற்படுவதற்கு முதன்மை காரணமாக திகழ்வது புகையிலை பொருட்களின் பயன்பாடு தான்; அதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் சில்லறை விலையில் 75 சதவீதம் வரியாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி மற்றும் கூடுதல் தீர்வைகளையும் சேர்த்து 52 சதவீதம் வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் இப்போது ரூ.15 க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும்.
அதேபோல், பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட எந்த அரசும் முறையாக செயல்படுத்தவில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு இதய நோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பொது இடங்களில் புகை பிடிப்பது தான் முக்கிய காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை 2030-ஆம் ஆண்டுக்குள் மூன்றில் ஒர் பங்கு குறைக்க வேண்டும் என்பது நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். புற்றுநோயைத் தடுக்கும் நோக்கத்துடன் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சோன முத்தா…. போச்சா.. போச்சா
-அரியலூர் சட்டநாதன்