கொரோனா தொற்றால் பொருளாதார மந்தமான நிலையில் வங்கிகள் மட்டும் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்வதில் எந்தவித குறையும் வைக்காமல் கறாராக கலெக்ஷன் செய்தது. இது குறித்து பலவித புகார்கள் சென்ற பின் ரிசர்வ் வங்கி அப்போதைக்கு அப்போது புது புது நம்பிக்கைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்தது.
தற்போது ஏழைகள் மற்றும் சமூகத்தின் வங்கி சேவைகள் சென்றடையாத பிரிவினர் தொடங்கிய 41.13 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளிட்ட 60.04 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்த இலவச சேவைகளுக்கு எந்த விதமான சேவை கட்டணமும் இல்லை என அறிவித்துள்ளது.
பேங்க் ஆப் பரோடா வங்கியானது வழக்கமான சேமிப்பு கணக்குகள், நடப்பு கணக்குகள், பணக் கடன் கணக்குகள் மற்றும் மிகைப்பற்று கணக்குகள் வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் செய்யக்கூடிய இலவச பண செலுத்துதல் மற்றும் திரும்பப் பெறுதல்களின் எண்ணிக்கை தொடர்பாக நவம்பர் 1 முதல் சில மாறுதல்களை செய்தது. இலவச பண செலுத்துதல் மற்றும் திரும்பப் பெறுதல்களின் எண்ணிக்கை ஒரு மாதத்துக்கு ஐந்து முறை என்பதில் இருந்து மூன்று முறையாக குறைக்கப்பட்டன.
எனினும், இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகான பரிவர்த்தனைகளுக்கானக் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது இந்த மாற்றங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. பிற பொதுத் துறை வங்கிகள் இந்தக் கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தவில்லை.
கொரோனா பெருந்தொற்று நிலவரத்தைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் வங்கிக் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் இதர பொதுத் துறை வங்கிகள் தெரிவித்துள்ளன. சொன்ன சொல்லை காப்பாற்றினால் சரி..!