விவசாயிகளுக்கு உதவும் பீமா யோஜனா பயிர் காப்பீட்டு திட்டம்
பூச்சி தாக்குதல்கள், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணி களால் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க பிரதமர் பீமா யோஜனா பயிர் காப்பீடு உதவுகிறது. எதிர்பாராத இழப்புகளைத் தவிர்க்க, பயிர் காப்பீட்டு பிரிமியத்தை செலுத்துமாறு, விவசாயிகள் இடையே விழிப்புணர்வை வேளாண் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
குறைந்த பிரிமியத்துடன் கூடிய பயிர் காப்பீடு வழங்கி, வேளாண் உற்பத்திக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பசல் பீமா யோஜனா கரீப் பருவத்தில் தொடங்கப்பட்டது. குறுகிய கால பருவ வேளாண் நடவடிக்கை கடன்கள்/ குறிப்பிட்ட பயிர்களுக்கான கிசான் கடன் அட்டைகளுக்கு அனுமதிக்கப்பட்ட விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
பயிர் காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சராசரி விளைச்சலுக்கு ஏற்ப, நிதி அளவை நிர்ணயிப்பது மாநிலங்களின் விருப்பமாகும். இதற்கு ஏற்ப பிஎம்எப்பிஒய் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பாசனமற்ற பயிர்களுக்கு 30 சதவீதம் மானியம் அளிக்கிறது. பாசனப் பகுதிகளுக்கு அது 25 சதவீதமாகும். வேளாண் பயிர்க் கடன்கள் பெற்றுள்ள விவசாயிகள், அதே வங்கியிலேயே காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், நெல், பருப்பு வகைகள், வேர்க்கடலை, சோளம் மற்றும் சிறு தானியங்களுக்கு காப்பீட்டு தொகையில் 2 சதவீதம் மட்டும் செலுத்த வேண்டும். பருத்தி பயிர்களுக்கு மொத்த காப்பீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும்.