வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் 3… தேவை தொலைநோக்கு பார்வை…!
வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் 3… தேவை தொலைநோக்கு பார்வை…!
உலகின் தலைசிறந்த பொழுதுபோக்கு இடமாகக் கருதப்படுவது “டிஸ்னி லேண்ட்” ( Distney Land). இந்த பொழுது போக்கு உலகத்தில் என்ன மாதிரியான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க வேண்டும், எங்கே செயற்கை நீரோடை இருக்க வேண்டும், எந்த பகுதியை எப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்று இந்த பொழுதுபோக்கு உலகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் டிசைன் செய்தவர் வால்ட் டிஸ்னி. ஆனால், டிஸ்னி வேர்ல்டு பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டபோது அந்த மேதை உயிருடன் இல்லை.
டிஸ்னி இந்த பொழுதுபோக்கு உலகத்தை நிர்மாணிக்க துவங்கி ஆறு ஆண்டுகள் கடந்தபோதே காலமாகிவிட்டார். திட்டமிட்டபடி பணிகளை முடிக்க அவரது வாரிசுகளுக்கு மேலும் மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன. கடைசியில் டிஸ்னி வேர்ல்டு திறக்கப்பட்ட நாள் அன்று ஒரு ஊழியர் இன்னொரு ஊழியரிடம் சொன்னார், “காண்போரை கவரும் வண்ணம் பேரெழிலோடு உருவாகியிருக்கும் இந்த பொழுதுபோக்கு உலகத்தைப் பார்க்க வால்ட் டிஸ்னிக்கு கொடுத்து வைக்கவில்லையே?”
இதற்கு அடுத்த ஊழியர் பதில் சொன்னார், “ டிஸ்னி பார்க்கவில்லை என்று யார் சொன்னது?” நீயும், நானும், பொதுமக்களும் இதை இப்போது தான் பார்க்கிறோம். ஆனால், டிஸ்னியோ இதை பல ஆண்டுகளுக்கு முன்பே தன் மனக்கண்ணாலேயே பார்த்துவிட்டார். அவருடைய கனவு தான் இன்று நனவாகி உள்ளது.
“வால்ட் டிஸ்னியின் வாழ்வில் இன்னொரு செய்தி யும் புதைந்து கிடக்கிறது.” தீம் பார்க்“ என்றால் என்னவென்றே உலகம் அறிந்திராத காலத்தில் அவர் அதை உருவாக்கினார். மாறுபட்ட சிந்தனை இருந்ததால் தான் உலகம் போற்றும் ஒரு பொழுதுபோக்கு உலகத்தை அவரால் உருவாக்க முடிந்தது.
ஆம்! வாய்ப்புகளுக்காக காத்திருங்கள். வந்தவுடன் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் தான் ராஜா.
சோனி கம்பெனி டேப் ரெக்கார்டர் விற்பனை உச்சத்தில் இருந்த சமயம் அது. அதே நேரம் ரயில், விமானம் என்று பயணம் போகும் போதும், பீச், பார்க் என்று பிக்னிக் போகும் போதும் சோனியின் டேப் ரெக்கார்டரை கையோடு எடுத்து சென்று பாட்டுக் கேட்க முடியவில்லை. காரணம் அந்த டேப் ரெக்கார்டர் சைஸில் பெரியதாக இருந்தது. இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று யோசித்த சோனி நிறுவனத்தின் இயக்குநர் இபுகா (ibuka) வாக்மேனை வடிவமைத்தார்.
அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுக்காத வண்ணம் பாட்டு கேட்க வசதியாக சோனி நிறுவனம் வாக்மேனை வடிவமைத்து இருந்தது. இதற்காகவே காத்திருந்தது மாதிரி உலகம் முண்டியடித்துக்கொண்டு வாக்மேனை போட்டி போட்டிக் கொண்டு வாங்கியது. இத்தனைக்கும் Walkman என்ற சொல் இலக்கண
ரீதியாக சரியான ஆங்கில சொல் இல்லை. என்றாலும், ஆங்கிலம் பேசும் நாடுகள் உட்பட மொத்த உலகமும் வாக்மேனில் இருந்த வசதியைக் கண்டு வியந்து, அதைக் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொண்டது.
வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொண்டு அதற்கு தீர்வையும் தேடித் தந்ததால் சோனி இன்றும் மார்க்கெட் லீடராக வலம் வருகிறது. “ஐக்கியா” (IKEA) எனும் மர பர்னிச்சர்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இங்வார் கம்ப்ராட் (Ingvar Kamprad) என்பவர் ஆரம்பித்தார். மெகா சைஸ் மர பர்னிச்சர்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது சிரமமாக இருந்ததால் தனித்தனியே செய்து போகுமிடத்தில் அசெம்பிள் செய்வது என்ற ஐடியாவை செயல்படுத்தினார். இன்று உலகிலேயே மிகப்பெரிய பர்னிச்சர் ஸ்டோராக ஐக்கியா திகழ்கிறது.
மாற்றத்திற்கு தயாராக இருங்கள் !
அமெரிக்காவில் கர்னல் சாண்டர்ஸ் என்று வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். எத்தனை பெரிய ஹோட்டலாக இருந்தாலும் அங்கே கிடைக்கும் சிக்கன் எதுவுமே சின்ன வயதில் தனது வீட்டில் சாப்பிட்ட சுவையில் இல்லை. அதே சுவையில் சிக்கன் செய்வது எப்படி என்று ஒரு ரெசிபியை தயார் செய்து எடுத்துக் கொண்டு பல ஹோட்டல்களை அணுகினார். “இதில் சொல்லியிருக்கும்படி சமைத்தால் சிக்கனை வாயில் வைக்க முடியாது என்று கேலி, கிண்டல்களோடு மறுத்தார்கள். இவரின் ரெசிபியை கிட்டத்தட்ட கேலி செய்யாதவர்களே இல்லை.
விமரிசனங்கள் அனைத்தும் மிக கடுமையானவை, மனதில் காயம் ஏற்படுத்த கூடியவை. ஆனால், கர்னல் மனம் தளரவில்லை. ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்களை தாண்டி, ஒருவருக்கு இந்த ரெசிபி பிடித்துப் போக “கென்டகி ஃப்ரைட் சிக்கன் “ (KFC) என்னும் சர்வதேச நிறுவனத்திற்கான கால்கோள் விழா நடந்தது.
இன்று உலகமெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளோடு விரிந்து பரந்திருக்கும் ரிதிசி ன் ஆரம்பம் இது தான். உழைப்பு, மனஉறுதி, விடாமுயற்சி, வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொளல், உதாசீ னங்களை தாங்கும் நெஞ்சம் இவையெல்லாம் வெளி நாடுகளில் மட்டும்தானா ? நம் ஊரில் இல்லையா, இதோ வரும் வாரங்களில்….
பழகலாம் தொடர்ந்து!
கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை felixrtn@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு வரவேற்கிறோம்.