உழவர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தேங்காய் விலை சரிவடைந்துள்ளது.
புதுக்கோட்டை உழவர் சந்தையில் கிலோவில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை பின்வருமாறு, தக்காளி ரூ.90-க்கும். சுண்டைக்காய் ரூ.150-க்கும், இஞ்சி ரூ.100-க்கும், மாங்காய் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகள் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது ரூ.30 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த மாதம் வரத்து குறைவால் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது வரத்து உள்ளதால் ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலை ரூ.50 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது என்ற நிலையில் முருங்கைக்காய் விலை உயர்வு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
முருங்கைக்காய் விலை உயர்வு கண்டுள்ள மற்றொரு புறம் தேங்காய் விலை குறைந்துள்ளது. அதாவது தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகாவுக்கு அடுத்தப்படியாக தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தென்னை பயிரிடும் பரப்பும், தேங்காய் உற்பத்தியும் அதிகம் இருந்தாலும், கடந்த வருடத்தில் நிலவிய கடுமையான வெப்பத்தால் தேங்காய் உற்பத்தி குறைந்தது.
இதில் ஒரு கிலோ ரூ.80 தற்போது கிலோ ரூ.50-க்கு விற்பனை ஆவதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தேங்காய் விலை சரிந்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது தேங்காய் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து சரிந்ததால் தென்னை பயிரிடும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
புதுக்கோட்டை காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேங்காய் விலை கிலோ ரூ.50 வரை விற்பனை ஆனது. அக்டோபர் மாதம் தொடக்கத்தில் ரூ.45- ஆக இருந்த சிறிய ரக தேங்காயின் விலை நவம்பர் மாத முதல் வாரத்தில் ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை ஆனது. டிசம்பர் மாதம் தேங்காயின் விலை ரூ.70 முதல் 80 வரை விற்பனை ஆனது.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த பொங்கல் பண்டிகையின் போது தேங்காயின் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் விலை குறைந்து தென்னை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு தேங்காயின் விலை ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் இந்த வாரத்தில் புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டாலும். தேங்காய் விலை குறைந்து கிலோவிற்கு ரூ.50 விற்பனை ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.



