ஊதக் கூடாது… “கையுறை” கட்டாயம்…
“ஒட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட உணவு வழங்கல் பிரிவில் பணியாற்றுபவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.
பொது மக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பொது மக்கள் மத்தியிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“உணவு பொருட்களை பார்சல் செய்யும் போது எச்சில் தொட்டு பேப்பரை பிரிப்பதாலும், ஊதுவதாலும் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த பொதுநல மனுவிற்குத் தான் மேற்கூறிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.