தலை முடியையும் தானம் செய்யலாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தலை முடியையும் தானம் செய்யலாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
55 ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு தென்னூர் நடுநிலைப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து தலை முடியையும் தானம் செய்யலாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார் புத்தூர் கிளை நூலக நூலகர் புகழேந்தி வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தாய், தந்தையுடன் இணைந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருவதும் புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கீர்த்தனா பேசுகையில்,
புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையின்போது தலைமுடியை இழப்பவர்களுக்கு உதவுவதற்காக தலை முடியை தானமாக வழங்கலாம் அதற்கு தேவை ஒவ்வொருவரின் சுய விருப்பம் மட்டுமே ஆகும்.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையின்போது தலைமுடியை இழப்பவர்களுக்கு உதவுவதற்காக தலை முடியை தானமாக வழங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. தலைமுடியை சரியாக கத்தரித்து வழங்காவிட்டால் தானமாக வழங்கும் முடி பயனற்று போய்விடும்.
தானம் செய்யக்கூடிய முடி குறைந்தபட்சம் 8 அங்குலங்கள் முதல் 14 அங்குலம் வரை இருக்க வேண்டும். குறைந்தபட்ச நீளத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலை முடியை விக் வடிவில் தயாரித்து வழங்கும் தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அவர்கள் முடியின் நீளம், அடர்த்தி போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான கூந்தலை தானமாக பெறுகின்றனர். சில தொண்டு நிறுவனங்கள் வண்ணங்கள் பூசப்பட்ட முடிகளை நிராகரித்துவிடுகின்றன. ரசாயன சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் அத்தகைய முடிகளை வாங்குவதில்லை. சில தொண்டு நிறுவனங்கள் நீளமான முடியை மட்டுமே வாங்குகிறது. முடியின் அடர்த்தி எப்படி இருக்கிறது என்பதையும் சில நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன. தானமாக கொடுக்கப்போகும் கூந்தலை இயற்கையான முறையில் பராமரித்து உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கூந்தலை எந்த பகுதியில் இருந்து வெட்ட போகிறீர்களோ அங்கு இறுக்கமாக ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். கூந்தலின் நுனிப்பகுதி வரை முழுவதுமாக வெட்டிவிடக்கூடாது. கூந்தலின் நீளமும், அடர்த்தியும் ஒரே அளவில் இருக்க வேண்டும். அதனால் கூந்தலின் நுனிப் பகுதிக்கு அருகில் மற்றொரு ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். இரு ரப்பர் பேண்டுக்கும் இடையே கூந்தல் எவ்வளவு நீளம் இருக்கிறது. அந்த நீளம் தானமாக பெறும் நிறுவனத்தின் விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொண்டு முடியை வெட்ட வேண்டும் என்றார்.