உலக அளவில் வணிகம்: திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தொழிலதிபர் இனிகோ இருதயராஜ் :
பெங்களுரில் உள்ள கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி நிறுவனம். தெற்காசியாவின் நம்பர் ஒன் நிறுவனமான 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றக் கூடிய ஷாஹி எக்ஸ்போர்ட்ஸில் பணியாற்றும் அன்பழகன், சென்னையில் உள்ள, கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழில் அனுபவம் கொண்ட இனிகோ இருதயராஜை அழைத்து, “சென்னையில் புதிதாக ஒரு கார்மெண்ட் உற்பத்தி நிறுவனத்தை தொடங்க எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான இடம் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கு உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுக்கிறார்.
நண்பன் அன்புவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, பெங்களுரிலிருந்து சென்னை வந்திறங்கிய ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளை காரில் அழைத்துக் கொண்டு, நிறுவனம் தொடங்குவதற்கான இடம் மற்றும் பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுககு வழிகாட்டுகிறார் இனிகோ இருதயராஜ்.
நிறுவனம் தொடங்குவதற்கான ஆய்வு பணிகள் முடிந்தது. என்றாலும் சில நிர்வாக காரணங்களால் அவர்கள் கார்மெண்ட் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணியை கைவிட்டு டெல்லி திரும்பினர். இரண்டொரு நாள் கழித்து இனிகோவின் கன்சல்டிங் பணிக்காக எனக் கூறி ரூ.2 லட்சத்திற்கான காசோலை, டெல்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
தனியார் நிறுவனத்தில் அன்றைய புதிய மாடல்களான டாடா சுமோ, குவாலிஸ் உள்ளிட்ட கார்களில் உயர்பொறுப்பில் வலம் வந்தவர், பின்னர் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பி கழுத்தில் கிடந்த தங்கச் செயினை அடகு வைத்து, பழைய மாருதி 800 காருடன் வலம் வந்த நேரத்தில் ரூ.2 லட்சம் என்பது பெரிய தொகை தான். இருந்தாலும் ஒழுக்கம், கட்டுப்பாடு, நற்சிந்தனைகளை போதித்து வளர்த்த அவரின் தந்தை ஸ்தனிஸ்லாஸ் பிள்ளையின் வளர்ப்பு, பணத்திற்காக அவரின் குணத்தை மாற்றிவிடவில்லை.
ரூ.2 லட்சத்திற்கான காசோலை திரும்பியதை கண்டு ஆச்சரியம் கொள்கின்றனர் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர்கள். ஏற்கனவே சென்னையில் இன்முகத்துடன் கூடிய அவரின் அணுகுமுறை அவர்களை கவர்ந்துள்ளது. இப்போது நட்பிற்காக பணத்தை புறந்தள்ளிய குணம், இனிகோவிற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது. தங்கள் நிறுவனத்தில் உயர்பொறுப்பு அளித்து நல்ல சம்பளம் கொடுக்க நினைக்கிறார்கள். ஆனால் தான் சொந்தமாக தொடங்கிய நிறுவனத்தை விட்டுவிட்டு, சென்னை தாண்டுவதில்லை என உறுதியுடன் மறுத்துவிடுகிறார். இறுதியில் ஓர் ஒப்பந்தம்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆடைகளை, சென்னையில் உள்ள ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்து, தயாரித்து வாங்கி, அவற்றின் தரம் பார்த்து, உரிய நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்கு சேவைக் கட்டணமாக ஒரு சட்டைக்கு ரூ.2 என நிர்ணயிக்கப்படுகிறது.!
1996..!
Master of Social Studies and Human Resources என்ற பட்ட மேற்படிப்பு படித்த இனிகோ இருதயராஜிற்கு, “வேலை இல்லை” என கழுத்தை பிடித்து (நிஜமாகவே கழுத்தைப் பிடித்து..!) வெளியே தள்ளுகிறது சென்னை, சேத்பட்டில் உள்ள ஒரு நிறுவனம். வேலை இல்லை. நண்பர்களுடன் தங்கிய விடுதிக்கு, தன் பங்குக்கு கொடுக்க வேண்டிய வாடகை பணம் இல்லை. “என்னிடம் வாடகை பணம் கொடுக்க காசில்லை. தினமும் ஹோட்டலில் சாப்பிடும் உங்கள் 8 பேருக்கும் நானே சமைத்து தருகிறேன்” என இருக்கும் இடத்திலேயே ஒர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒரு வாய்ப்பை பெற்று, தன் நிலையை தக்க வைத்துக் கொண்டு, வேலை தேடும் படலத்தை தொய்வின்றி தொடர்ந்திருக்கிறார் இனிகோ இருதயராஜ்.
1988..!
“திருச்சி, செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்த போது கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தினேன். ஆனால் கால்பந்து விளையாட SHOE கட்டாயம் என ஆசிரியர் காசி தெரிவித்துவிட, SHOE வாங்க கையில் பணம் இல்லாததால், SHOE-விற்காகவே என்.சி.சி.யில் சேர்ந்தேன். அப்போது புதுடெல்லியில் குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்பதற்கான தேர்வு நடைபெற்றது. 6 அடி உயரம் தாண்டுவேன். 30 நிமிடம் ஓடி 6 கி.மீ. அடையும் தூரத்தை 18 நிமிடத்தில் ஓடியது, சிறு வயதிலிருந்தே அப்பாவின் கட்டுப்பாடான வளர்ப்பு, காலையில் தவறாது நடைபெற்ற ஓட்டப்பயிற்சி உள்ளிட்ட எல்லாமான எனது திறன், ஒழுங்கு, நேரம் தவறாமை, கீழ்படிதல் என்ற மேலான குணம் ஆகியவை, பள்ளி அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என வரிசையாக நடைபெற்ற அனைத்து முகாம்களிலும் என்னை தேர்ச்சி பெறச் செய்தது. இறுதிச்சுற்று டெல்லியில்..! டெல்லி செல்வதற்கான ஆடைகளை எடுத்துச் செல்லத் தேவையான பெட்டியை கூட பக்கத்து வீட்டில் கடன் வாங்கித் தான் எடுத்துச் சென்றேன்.
ஆண்கள். பெண்கள் என அனைவரும் பங்கேற்கும் பரேடு பயிற்சி. ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்து, யார் பனியனில் அதிக வியர்வை வழிகிறது என பாத்ரூம் மக்கில் பனியனை பிளிந்து அளவெடுத்து பெருமைபட்டுக் கொள்வோம். முதல் ரவுண்டில் தேர்வானேன். அடுத்து ரவுண்டு செல்ல எனக்கு SHOE வேண்டும். என் SHOE நம்பர் 13 என்பதால் அந்த அளவிற்கு SHOE இல்லாமல் ஒரு மிலிட்டரி குடோன் சென்று பழைய 13ம் நம்பர் SHOE தேடிக் கண்டுபிடித்தோம். ஆனால் SHOE ரொம்ப மோசமாக இருந்தது. இதனால் நம்மை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்பதால் இரவு முழுக்க அந்த SHOE-வை பாலீஸ் செய்தேன். மறுநாள் நடைபெற்ற முகாமில் நான் தேர்வானேன்.
SHOE பாலீஸ் செய்து சுத்தமாக வைத்திருந்ததற்காக எனக்கு இந்தியன் மிலிட்டரி அகாடமி சார்பில் CHERRY BLOSSOM அவார்டு கிடைத்தது. அகில இந்திய மலையேறுதல் கேம்ப், என் தலைமையில் ஒரு குழு சென்றது. மேப் ரீடிங் முறையில் மலையேறி, இலக்கை சரியாக அடைந்து திரும்புதல் பயிற்சியிலும் சாதனை புரிந்தேன். ஒரு இலக்கை அடைவதற்கு எத்தனை படிகள் உள்ளனவோ அத்தனை படிகளையும் கடந்து சென்ற அனுபவமும், பக்குவமும் என்.சி.சி. கற்றுக் கொடுத்ததால், “வேலை இல்லை” என கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய போது சோர்ந்து விடவில்லை” என்கிறார் இனிகோ இருதயராஜ்.
“கல்லூரிக்காக பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைத்த என்னை கல்லூரியே சோதனைக்குள்ளாக்கியது. கல்லூரி செய்முறை தேர்வு நடைபெற்ற போது நான் என்.சி.சி., கால்பந்து என நேரத்தை கழித்தேன். தேர்வில் பங்கேற்க முடியாமல் போனதால் என் படிப்பை மேலும் ஓர் ஆண்டு நீடிக்குமாறு இயற்பியல் துறைத் தலைவர், பிரின்சிபல் இருவரும் கூறினர். என்.சி.சி.யில் சேர்ந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த என்னுடைய படிப்பு காலத்தை வீணடிக்கிறார்கள் என்ற கோபத்துடன் நான், பாரதிதாசன் பல்கலைகழகத்தின் அன்றைய துணைவேந்தர் முத்துக்குமரனை சந்தித்து என் நிலையை விளக்கினேன். அவர் எனக்கு ஆதரவாக, உடனடியாக கல்லூரி பிரின்சிபாலை அழைத்து, “எனக்கு செய் முறை தேர்வை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வைக்கவும்“ எனக் கூறியதோடு அதையே அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பினார். இதனால். கல்லூரி நிர்வாகத்தின் கோபத்திற்கு ஆளானேன்.
இளங்கலை படிப்பை முடித்த பின்னர், “எக்காரணம் கொண்டும் இந்த கல்லூரியில் மேற்படிப்பு படிக்க மாட்டேன்” என பிடிவாதமாக மறுத்துவிட்டேன். இதையடுத்து என் அப்பா என்னை, சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் Master of Social Studies and Human Resource படிப்பில் சேர்த்துவிட்டார். அந்த படிப்பு முடித்தால் 5 Figure சம்பளம் (ரூ.10,000-த்திற்கும் மேல்..!) எனக் கூறினார்கள்.
1994.!
நான் படித்த படிப்பிற்கு திருச்சியில் வேலை கிடைக்கவில்லை என்பதால் சென்னையில் நண்பன் பெலிக்ஸ் அறையில் தங்கி வேலை தேடினேன். நான் படிக்கும் ஜோசப் கல்லூரியிலிருந்து முக்கொம்பு வரை ஓடிச் சென்று திரும்பும் ஓட்டப்பயிற்சியே, சென்னை, நுங்கம்பாக்கத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள அம்பத்தூருக்கு நடந்தே சென்று வேலை தேட வைத்தது. படித்தால் 5 Figure சம்பளம் என்றார்கள். ஆனால் 2 Figure சம்பளம் தரும் வேலை கூட கிடைக்கவில்லை.
அப்பா ஸ்தனிஸ்லாஸ் பிள்ளை திருச்சி, செயிண்ட் ஜோசப் கல்லூரி தேவாலயத்தில் ஓர் உபதேசியர். கல்லூரியின் அறிவியல் சோதனை கூட பொறுப்பாளர். அவர் கற்றுக் கொடுத்த ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை என்.சி.சி.யில் நான் கற்றுக் கொண்ட பாடம் எல்லாம் என்னை இந்த சமூகத்தில் சரியான வாழ்க்கை வாழ பண்படுத்தியது எனச் சொல்லலாம்.
நெல்லை வாங்கி அவித்து மில்லில் அரைத்து அரிசியாக்கி அதை நாங்கள் சேமித்து வைத்து உண்போம். சிக்கனம்.! கடன் வாங்க மாட்டார். கடன் என்ற வார்த்தைக்கு SPELLING கூட தெரியாது.
நான் கல்லூரி படித்த காலத்தில் அறிவியல் பயிற்சி கூடத்தில் கெமிக்கல் கண்ணில் பட்டு கண் பார்வை இழந்த போதும், நான் சென்னைக்கு வேலை தேடிச் செல்கிறேன் எனக் கூறிப் புறப்பட்ட போது, என்னுடன் வந்து, அங்குள்ள நிலையை ஆராய்ந்து, கண் பார்வையற்ற நிலையிலும் தனியாகவே சென்னையிலிருந்து திருச்சி வந்தவர்.
வேலை தேடி கஷ்டப்பட்ட காலத்தில், குடும்ப கஷ்டம் குறித்து ஒரு வார்த்தை கூட அவர் எழுதும் கடிதத்தில் இருக்காது. பைபிள் வசனம், மேற்கோள்கள் தான் அந்த கடிதத்தில் இருக்கும். இன்றளவும் அந்த கடிதங்களை நான் பைண்டு செய்து வைத்திருக்கிறேன்.
அப்பாவின் கடிதமும், அருட்தந்தை ஜோசப் சேவியர் அவர்களின் தன்னம்பிக்கை வார்த்தைகளும் இல்லையென்றால் நான் இல்லை என்று சொல்லலாம்.
கல்லூரி காலத்தில் நடைபெற்ற INTERNSHIP பயிற்சிக்கென சென்னை, TI CYCLES நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தில் கிடைத்த தொடர்பை கொண்டு அங்கு ஆலன் மேத்யு என்பவரை சந்தித்து என் வேலை தேடும் சூழலை விளக்கினேன். இதையடுத்து ரூ.2,000 சம்பளத்தில் அக்கம்பெனியில் CLERICAL வேலை போட்டு கொடுத்தார். இதைத் தொடர்ந்து I.S.E.X. என்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு ரூ.2,500 சம்பளம். அங்கு பணியாற்றும் பணியாளர்களிடம் நேரம் தவறாமை, கட்டுப்பாடு, ஒழுக்கத்தை கடைபிடிக்க வழியுறுத்தினேன். இதனால் உற்பத்தி அதிகரித்தது. மாதத்தில் 30 நாளில் கொண்டு வந்த உற்பத்தி 20 நாட்களில் கிடைத்தது.
இதை அறிந்த அந்நிறுவனத்தின் எம்.டி. ரவி மல்ஹோத்ரா, தான் தொடங்க இருக்கும் புதிய நிறுவனத்தில் நிர்வாக பணியில் சேர பணித்தார். ஆலந்தூரில் உள்ள ஒரு நலிவடைந்த நிறுவனத்தை வாங்கி அதை சீர்படுத்தி உற்பத்தியை தொடங்கினோம். அங்கு வேலையில் நான் காட்டிய ஈடுபாடு, 6 மாதத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு பெற்றுத் தந்தது. 1995ல், ரூ.2,500 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். 2000த்தில் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறுகையில், அதாவது ஐந்தாண்டுகளில், நான் வாங்கிய சம்பளம் ரூ.78,000. TAIG என்ற பெயரில் நால்வருடன் இணைந்து சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தினோம். அப்போது தொழிலை தாண்டி அரசியலில் கவனம் செலுத்தினேன். இதனால் நிறுவன செயல்பாட்டில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. நிறுவனம் ஏராளமான கடனை சந்தித்தது. இதையடுத்து பார்ட்னர்கள் வெளியேற, நிறுவனத்தை முழு உரிமையாளராக கொண்டு நடத்தத் தொடங்கினேன்.
2007..!
அப்போது தான் பெங்களுர், ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய என் நண்பன் அன்பழகன் மூலம் அந்நிறுவனத்தின் நிர்வாகத்துடன் தொடர்பு ஏற்பட்டு, ஒரு சட்டைக்கு ரூ.2 சேவைக் கட்டணமுடன் கூடிய ஏற்றுமதி வாய்ப்பு கிடைத்தது. ஒரே ஆண்டில் 16 லட்சம் ஆடைகளை ஏற்றுமதி செய்து ரூ.32 லட்சம் சம்பாதித்தேன். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் Diesel, Fila, Gsus, Indian Blue Jeans, USpolo என 65க்கும் மேற்பட்ட ப்ராண்டுகளில் சட்டை ஏற்றுமதி செய்கின்றேன். 3 மாதத்திற்கு ஒருமுறை வெளிநாடு சென்று ஆர்டர்கள் பெற்று வருவேன்.
ஆண்கள் பங்கேற்கும் பேஷன் ஷோ போட்டியின் மூலம் புதிது புதிதான ஆடை வடிவமைப்பு ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை ஏராளமாக தைத்து தருவதற்கான ஆர்டர்கள் கிடைக்கும். இதையடுத்து எனது நிறுவனக் கிளைகளை திருப்பூர் மற்றும் பெங்களுரில் தொடங்கினேன். அரசியலில் கவனம் செலுத்தியிராவிட்டால் பங்களாதேஷ், மடகாஸ்கரிலும் கிளை அலுவலகம் திறந்திருப்பேன்.
வெளிநாடுகளில் 6 மாதத்திற்கு மேல் ஒரு சட்டையை அணிய மாட்டார்கள். 2022ம் ஆண்டு கோடை காலத்திற்கு தேவையான ஆடை டிசைன்களை இப்போதே முடிவு செய்து ஆர்டர் தருவார்கள். அதுவே பின்னர் நம் நாட்டில் FASHION TREND ஆகிறது. தயாரிப்பது நாம் என்றாலும் FASHION TREND உருவாக்குவது அவர்களே.! இந்திய சந்தையை பொறுத்தவரை, உற்பத்தியாகும் ஆடைகளின் விலையை விட 5 மடங்கு லாபம் வைத்தே விற்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் 3 மடங்கு தான் லாபம் வைப்பார்கள். காரணம் இந்தியாவில் ஜவுளித் துறையில் தரகர்கள் தலையீடு அதிகம்.
ஏற்றுமதி வர்த்தகம், வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி வரவு இவையெல்லாம் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும். திருச்சியில் பிறந்து வளர்ந்த நான் இன்று பாகிஸ்தான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர உலக நாடுகள் அனைத்திற்கும் சென்று வர்த்தகம் செய்து வருகின்றேன். திருச்சியின் பொருளாதாரம் உயர்ந்திட, திருச்சி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்திட தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்.
பள்ளிக்காலத்தில் திருச்சி, மெயின் கார்டுகேட், போஸ்ட் ஆபிஸ் அருகில் உள்ள மைக்கேல் ஐஸ்க்ரீம் கடை, சில்வர் ஸ்டிரிங்ஸ் டெய்லர் கடைகளில் PART TIME வேலை செய்து பள்ளி கட்டணம் செலுத்தினேன். இன்று இந்தியாவிற்கு அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறேன். HYUNDAI நிறுவனத்தின் இரண்டாவது யூனிட் தொடங்கும் போது அதன் ஆலோசனை குழுவில் உறுப்பினராக அங்கம் வகித்தேன்.
சென்னையில், கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படித்த போது மெஸ்ஸில் சாப்பிட காசில்லாமல் வார்டனிடம் கெஞ்சி டைம் கேட்டு தாமதமாகவே பணம் கட்டுவேன். அதன் பாதிப்பால் இன்றளவும் அக்கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான சாப்பாடு கட்டணத்தை செலுத்தி வருகிறேன். அப்பா பெயரிலும், அண்ணன் பாதர் ஸ்டீபன் குழந்தைசாமி பெயரிலும் ஸ்காலர்ஷிப் வழங்கி வருகிறோம்” என்றார்.