மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கொண்டு வரும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளில் எரிவாயு விநியோகத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக விழுப்புரம் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டு எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த தட்டுப்பாட்டால், உணவகங்கள் மற்றும் டீக்கடைகளின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் கிடைக்காததால், பல உணவகங்கள் கட்டாயமாக விறகு அடுப்புகளுக்கு மாறியுள்ளன. கடும் வெயிலில் விறகு அடுப்பில் சமைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாக உணவக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், விறகு தேவையும் அதிகரித்துள்ளதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. முன்பு ஒரு டன் விறகு ரூ.4,000 இருந்த நிலையில், தற்போது ரூ.6,500 வரை உயர்ந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக உணவுப் பொருட்களின் தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது.
இதனால், மீல்ஸ் விலை ரூ.110 இருந்து ரூ.120 ஆகவும், வெரைட்டி ரைஸ் ரூ.40 இருந்து ரூ.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில டீக்கடைகள் ப்ளோவர் அடுப்புகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. மேலும், சில உணவகங்கள் தங்களது கிளைகளை குறைத்து, முன்பு இயங்கிய நான்கு கிளைகளில் தற்போது இரண்டு கிளைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இட்லி, தோசை, பூரி போன்றவற்றிற்கு மட்டுமே சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு, சாதம் மற்றும் குழம்பு போன்றவை விறகு அடுப்பில் தயாரிக்கப்படுகின்றன. சில இடங்களில் சைனீஸ் வகை உணவுகளின் தயாரிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், உணவகங்களின் செயல்பாடுகள் மேலும் பாதிக்கப்படலாம் என உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



