செல்வமகள் சேமிப்பு திட்டம், PPF போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொதுவாக, புத்தாண்டு பிறந்தாலே அரசிடம் இருந்து ஏதாவது நல்ல செய்தி வரும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில், செல்வமகள் சேமிப்பு திட்டம், PPF போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் இந்தாண்டு அதிகரிக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, பழைய வட்டி விகிதமே தற்போதும் தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகம் புதன்கிழமை (நேற்று) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, PPF மற்றும் NSC உட்பட அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது, ஜனவரி 1, 2026 முதல் தொடங்கும் இந்த புதிய காலாண்டிலும் பழைய வட்டி விகிதங்களே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீங்கள் பெற்று வரும் வட்டி, மார்ச் 2026 வரை அப்படியே தொடரும். சந்தையில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால், சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கனவு தற்போது நனவாகவில்லை. மாறாக, இது சாமானிய மக்களுக்கு சற்று ஏமாற்றமான செய்தியாக அமைந்தது.
செல்வமகள் சேமிப்பு திட்டம்… அதேபோல், உங்கள் மகளின் பெயரில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். ஏனெனில், இது தற்போதும் 8.2% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், இது அரசாங்க திட்டங்களில் சிறந்த வருமானத்தைத் தரும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)… இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி விகிதம் சற்று குறைவாக இருந்தாலும், வரியைச் சேமிக்க மக்களுக்கு இது சிறந்த வழியாகும். ஆகையால், வட்டி விகிதம் உயரவில்லை என்று நினைப்பதற்கு பதிலாக, வரிச் சலுகைகள் மற்றும் பாதுகாப்பைப் பெறுவதாக நினைக்கலாம்.
போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம்… இந்த திட்டத்திற்கு 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது சிறந்த மாத வருமானத்தை வழங்குகிறது. நீங்கள் கிசான் விகாஸ் பத்திரத்தில் (KVP) முதலீடு செய்தால், உங்கள் பணம் இரட்டிப்பாக 115 மாதங்கள் ஆகும். இது 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதேபோல், தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) 7.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.



