சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.6% உயர்ந்து $4,255.98 ஆக உயர்ந்துள்ளது. இது அக்டோபர் 21ஆம் தேதிக்குப் பிறகு உயர்ந்த அதிகபட்சமாகும்.
உலகம் முழுவதும் தங்கம் பிடிக்காத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தங்கம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். சேமிப்பு முதல் முதலீடு என அனைத்திலும் தங்கத்தின் தாக்கம் உள்ளது என்றே சொல்லலாம். மேலும், இந்தியாவில் தங்கம் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அவ்வப்போது குறைந்து வருகிறது. மறுபுறம், வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, வரும் 2026 புத்தாண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதன்படி, 2026ல் தங்கம் விலை உயருமா அல்லது குறையுமா என்று இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) கணக்கெடுப்பு கூறியுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட உலகளாவிய நிறுவன முதலீட்டாளர்களில், கிட்டத்தட்ட 70% பேர் 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 1, 2025 அன்று தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து, ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலையை எட்டியது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாகின்றன.
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.6% உயர்ந்து $4,255.98 ஆக உயர்ந்துள்ளது. இது அக்டோபர் 21ஆம் தேதிக்குப் பிறகு உயர்ந்த அதிகபட்சமாகும். வெள்ளி விலையும் 1.9% அதிகரித்து, அவுன்ஸ் ஒன்றுக்கு $57.46 ஆக உள்ளது. இதற்கிடையே, கடந்த நவம்பர் 12 முதல் 14 வரை நடத்தப்பட்ட ஆய்வில், அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை $5,000 ஐ தாண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், சுமார் 900க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு, அடுத்தாண்டு தங்கம் விலை எப்படி இருக்கும் என்ற தங்களின் எதிர்பார்ப்புகளை பகிர்ந்தனர்.

அந்த வகையில், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $5,000 ஐ தாண்டும் என்று கிட்டத்தட்ட 36 சதவீதம் பேர் நம்புகின்றனர். மூன்றில் ஒரு பங்கு தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,500 முதல் $5,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த ஆண்டு தங்கத்தின் விலை சுமார் 61 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கும் போன்ற எதிர்பார்ப்புகள் காரணமாக இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கிகள் தங்கத்தை தொடர்ந்து வாங்கினால் 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ப்ராட் அசெட் மேனேஜ்மென்ட்டின் 2025 அறிக்கையின்படி, தங்க முதலீடுகளில் கட்டமைப்பு மாற்றமும் தெளிவாகத் தெரிகிறது. முதலீட்டாளர்கள் டாலர் மதிப்புள்ள பத்திரங்கள் மற்றும் நாணய உணர்திறன் பங்குகளிலிருந்து விலைமதிப்பற்ற உலோகம் மற்றும் கிரிப்டோகரன்சிகளுக்கு தங்கள் நிதியை மாற்றுகிறார்கள். அதேபோல், ஜேபி மோர்கனும் தங்கத்தின் விலை உயரும் என்று கணித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $5,055 ஐ எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


