சிலிண்டருக்கு மானியம் வருதா?கண்டறியும் வழி
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
தற்போதைய நிலையில் சமையல் சிலிண்டருக்கு ரூ.79.26 மானியம் கிடைக்கிறது. சிலருக்கு ரூ.158.52, சிலருக்கு ரூ.237.78 வழங்கப்படுகிறது.
சிலிண்டர் மானியம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. ஆனால் சமீபகாலமாக சிலிண்டருக்கான மானியத்தை அரசு வழங்குகிறதா என்றே தெரியவில்லை. மானியத்தை மத்திய அரசு நிறுத்திவிட்டதா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது. காரணம் சென்ற 2020 மே மாதம் முதல் பலருக்குக்கும் சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கில் ஏறவே இல்லை என்பதே. இந்நிலையில் சிலிண்டருக்கான மானிய உதவியை மத்திய அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது.
சிலிண்டர் மானியம் வந்ததா இல்லையா என்பதை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே பார்க்கலாம். http://mylpg.in/ என்ற வெப்சைட்டில் சென்று உங்களுடைய LPG ஐடியைப் பதிவிட்டு, நீங்கள் சிலிண்டர் வாங்கும் கம்பெனி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். சிலிண்டருக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரையும் கொடுக்க வேண்டும். மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணைப் பதிவிட்டு, CAPTCHA குறியீட்டையும் உள்ளிட்டு ‘Proceed’ கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக வரும் புதிய பக்கத்தில் உங்களது ஈமெயில் ஐடி கொடுத்து பாஸ்வர்டு உருவாக்க வேண்டும். இது முடிந்ததும் உங்களது ஈமெயில் ஐடிக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும். அதை கிளின் செய்தால் உங்களது கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும்.
மீண்டும் http://mylpg.in/ வெப்சைட்டில் லாகின் செய்து View Cylinder Booking History/subsidy transferred’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மானியம் தொடர்பான விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.
ஒரு வேளை உங்களுக்கு சிலிண்டர் மானியம் வராமல் இருந்தாலோ வேறு ஏதேனும் புகார்கள் இருந்தாலோ 18002333555 என்ற டோல் பிரீ நம்பரை அழைத்து புகார் கொடுக்கலாம். சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜென்சிக்கு நேரில் சென்றும் நீங்கள் இதுகுறித்து விசாரிக்கலாம்.
சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அதேபோல, சிலிண்டர் இணைப்புடன் ஆதாரும் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.