கே.என்.நேருவை ஒரு தொழிலதிபர் என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் பள்ளி, கல்லூரி நிர்வாகம், அரிசி ஆலை நிர்வாகம், பல ஏக்கரில் விவசாய நிலங்களை கையாளும் நிர்வாகம் என அனைத்தையும் குடும்பத்தினரின் மேற்பார்வையில் நிர்வாகம் செய்து வருபவர். அவரை தேடி வருபவர்கள் இன்றளவும் “அமைச்சர் இருக்கிறாரா” என்று தான் கேட்கிறார்கள்.
திருச்சியின் அரசியல் வரலாற்றில் 28 ஆண்டு காலம் 24X7 என கட்சிப் பணியில் இடையறாது பரபரப்பாக, பம்பரமாக சுற்றிச் சுழன்று இன்று தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உச்சத்தில் இருக்கும் கே.என்.நேருவின் பலமே உள்ளொன்று வைத்திராத கோபமும் குறைவில்லாத அன்பும், அரவணைப்பும் தான்.
மீசைக்காரர் என கட்சியினரால் அன்போடு கூறப்படும் கே.என்.நேரு. கஷ்டப்படும் தொண்டருக்கு அள்ளிக் கொடுப்பதும், கட்சித் தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டபடுத்துவதும் அவரது தனி சிறப்பு. இவை அனைத்திற்கும் நேருவுக்கு கைகொடுப்பது அவரது குடும்பத்தினருடன் இணைந்து பார்க்கும் சகித தொழில்கள் தான்.
கே.என்.நேரு திருச்சியில் இருந்தால் தவறாமல் கட்சிக்காரர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். அவரோடு காரில் பயணிப்பவர்கள் களைத்து போனாலும் அவர் ஓய்வதில்லை. அதிகாலையே திருச்சி லால்குடி, திருவளர்சேலை பகுதிகளில் உள்ள வயல்களுக்கு சென்று பைல்களை பார்த்துவிட்டு தான் அடுத்தகட்ட வேலையை பார்ப்பதும், அவ்வப்போது திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான கேர் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆலோசனை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறார்.
அவரது தம்பிகளான ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் மகன் அருண், ராமஜெயம் மகன் வினித் ஆகியோர் மூலம் டெக்ஸ்டைல் மற்றும் கட்டுமான தொழில்களில் கோலோச்சுகிறார்கள்.
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய அரிசி ஆலை என்கிற பெருமை லால்குடி அடுத்த பூவாளூரில் இயங்கி வரும் எஸ்.என்.ஆர் ரைஸ் மில் பெற்றுள்ளது. தமிழக அளவில் அரிசி ஆலைகள் தொழில் நஷ்டத்தால் நலிவடைந்து வரும் நிலையில் எஸ்.என்.ஆர் ரைஸ்மில் எப்போதும் பிஸியாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 100 மெட்ரிக் டன் அரிசியை தரம் பிரிக்கும் தொழில்நுட்பம் வாய்ந்த அதிநவீன கருவிகள் இந்த ஆலையில் உள்ளது. இந்த ஆலையை நேருவின் தம்பி கே.என்.மணிவண்ணன் நிர்வகித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட முடிவெடுத்த நேரு தங்களுக்கு சொந்தமான எஸ்.என்.ஆர் ரைஸ் மில்லில் இருந்து பல நூறு டன் அரிசி மூட்டைகளை திருச்சி மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார்.
சட்டமன்றத்தில் பேசும் போது, “நான் ஒரு விவசாயி””, என பெருமையாக பலமுறை பதிவு செய்திருக்கிறார். இது வெறும் பேச்சுக்காக மட்டுமல்ல. விவசாயத்தின் அத்தனை நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். எந்தப் பயிரை எப்படி விளைவித்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்பதை அனுபவம் பூர்வமாக விளக்குகிறார் அந்த அளவுக்கு நேருவின் நாடி நரம்புகளில் கூட விவசாயம் உரமேறிக் கிடக்கின்றன. ஆஸ்திரேலியா சென்று அங்கிருந்து அரிய வகை மாடுகளை வரவழைத்து தனது பண்ணையில் வளர்த்து வருகிறார்.
சமீபத்தில் கே.என்.நேரு அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய அப்பா மிகப்பெரிய விவசாயி. என்னுடைய தாத்தா காலத்திலிருந்தே விவசாயம் தான் எங்கள் முக்கியத் தொழில். அரிசி ஆலையும் வைத்திருக்கிறோம். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிலைப் பார்த்துக் கொள்கின்றனர். நான் விவசாயத்தைக் கவனித்து வருகிறேன். எனக்கு விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இதைச் சொல்வது எனக்கு பெருமை தான். என்னுடைய அப்பா வழியில் எங்களுக்கு நிலபுலன்கள் நிறைய உண்டு.
என்னுடைய மனைவியும் விவசாயத்தில், என்னைப் போலவே மிகுந்த ஆர்வம் கொண்டவர். எங்கள் பூர்விக நிலங்களை அவர் தான் பார்த்துக் கொள்கிறார். நான் கூட விவசாயத்தில் சில சமயம் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், அவர், இரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லி மருந்தையோ பயன்படுத்தியதே கிடையாது. மாட்டுச் சாணம், இலை தழைகள், பஞ்சகவ்யா போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யும் இயற்கை விவசாயத்தில், உறுதியாக இருக்கிறார்.
திருச்சியில் இருக்கும் நாட்களில், எனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும், அதிகாலையில் எழுந்து செய்தித்தாள்களைப் படித்து விட்டு, தோட்டத்திற்குச் சென்று விடுவேன். அதன்பின், கட்சித் தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகள், கட்சிப் பணிகள் முதலியவற்றைப் பார்த்துவிட்டு, மாலையிலும், தோட்டத்திற்குச் சென்று விடுவேன். பெரும்பாலும் காலை, மாலை வேளைகளில் தோட்டத்திற்குச் சென்று விடுவது வழக்கம்.
மேலும், டில்லி முர்ரா, ஹரியானா கிர், காங்கேயம் மாடுகள் என நிறைய மாடுகளை வளர்த்து வருகிறேன். எங்கள் விவசாயத்தை இயற்கை விவசாயமாகவே கொண்டு செல்வதற்காகத் தான், மாடுகளை வளர்த்து வருகிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், வயல்வெளியில் செலவிடும் நேரம் என்பது ஒரு தனி சுகம் தானே?’’
“எங்கள் பரம்பரை விவசாயம் மிளகாய், மல்லி பயிரிடுவது. அதற்கு வேலை செய்ய சரியான ஆட்கள் கிடைக்காத காரணத்தால், அந்தப் பயிர்களைக் குறைத்துக் கொண்டு நெல், கரும்பு, மா, வாழை, தென்னை, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, புளி, சோளம் போன்றவற்றைப் பயிர் செய்து வருகிறோம். எங்கள் வயலில் விளையும் நெல்லை, எங்கள் ஆலையிலேயே அரைத்து, அதிலிருந்து வரும் தவிட்டை, எங்கள் மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துகிறோம். அந்த மாடுகளின் சாணத்தை, எங்கள் நிலத்திற்கே உரமாக்குகிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணியில் இருப்பவர்களுக்கு நிகரான மரியாதை விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
விவசாயம் என்பது எங்கள் உடம்போடும் உயிரோடும் கலந்தது. எந்த நிலையிலும், எந்தக் காலத்திலும், நான் பதவியில் இருந்த போதும் சரி, பதவியில் இல்லாத போதும் சரி, விவசாயத்தை விட்டதில்லை. விவசாயமே என் உயிர் மூச்சாக இருந்து கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு நான், விவசாயத்தை நேசிக்கிறேன். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் கூட, அதை விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டு, குலையாத அதே ஈடுபாட்டோடு விவசாயத்தைத் தொடர்கிறேன். இது என் இறுதி வரை தொடரும்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்ன்னு பாடுன பாரதி, விவசாயத்தைத் தான் முதல்ல சொன்னாரு. ஆனா, இன்னிக்குத் தொழிலுக்குத் தான் அரசாங்கம் முன்னுரிமை குடுக்குது. தொழிற்சாலையில உற்பத்தி செய்யிற பொருள்கள் பணத்தைக் கொடுக்கும். சோத்தைக் கொடுக்குமா?”.
“செய்ய முடியாதது எதுவும் இல்லை. கட்சிப்பணி, தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகள் முதலியவற்றை முடித்து விட்டு, மீதமிருக்கும் நேரத்தில் தான் வயலுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளேன். எத்தனை பிஸியாக இருந்தாலும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது வயலுக்குச் சென்று விடுவேன். அதற்கு ஏற்ற வகையில், நேரத்தை ஒதுக்கி விடுவேன்.” என்கிறார் சந்தோஷமாக.