உழைப்பு ஒன்னு தான் மூலதனம் -தன்னம்பிக்கையுடன் கூறும் பெட்ரீசியா மேரி
தனது கணவர் செய்து கொண்டிருந்த வேலையை அவர் இறந்த பிறகும், “ இது ஆணுக்கு மட்டுமே உரித்தான வேலை, இதை நீ செய்யக்கூடாது” என சொல்லும் சமுதாயத்தில் தனது பிள்ளைகளுக்காக தொடர்ந்து போராடி, எந்தவித எதிர்மறை கருத்துக்களையும் ஏற்காமல், பல சவால்களை ஏற்று ஒயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார், முடிவெட்டும் பெண் தொழிலாளி பெட்ரீசியா மேரி.
“ஏன்? பொண்ணு சவரம் பண்ணா மட்டும் காசு கம்மியா வாங்கனுமா, நா என்ன மீசை ஒரு பக்கம் மட்டும் எடுக்காம விட்டனா, இல்லை தலையில முடியே இல்லாம மொட்டை அடிச்சுவிட்டனா. எல்லாருக்கும் எவ்வளவு குடுக்குறீங்களோ அதே காசை கொடுக்கனும்” என்கிறார் முடிவெட்டும் பெண் தொழிலாளி பெட்ரீசியா மேரி.
திருச்சி சிந்தாமணி பஜாரில் வெம்பிலி சலூன் நடத்திவரும் பெட்ரீசியா மேரியை நம்ம திருச்சிக்காக சந்தித்தோம்.
“நான் பொறந்து வளர்ந்தது திருச்சி சர்க்கார்பாளையம். என் கணவர் ரூபன் சண்முகநாதன். என்னுடைய மாமனார் தன்ராஜ்தான் இந்த கடைய ஆரம்பிச்சாரு.
என்னோட அப்பாவும், என் மாமனாரும் நண்பர்கள் என்பதால் இருவீட்டார் சம்மதத்துடன் என் கணவர் ரூபன் சண்முகநாதன் மதம் மாறி என்னை கல்யாணம் செய்து கொண்டார். எங்களுக்கு 2001ல்ல கல்யாணம் ஆச்சு. எங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன். 7ஆண்டுகளாக என்னுடைய மாமனாருடன் இணைந்து வேலைப்பார்த்து கொண்டிருந்த என் கணவர். 2008க்கப்பறம் முழுக்க முழுக்க கடைய பாத்துக்க ஆரம்பிச்சிட்டாரு. நானும் டயிலரிங் முடிச்சருந்ததால இங்கே கடையிலயே ஓரமா மிஷின் போட்டு தைச்சுட்டு இருந்தேன்.
அப்பப்போ என் கணவருக்கு ஒத்தாசையா கடைல ஹேர்டை கலந்து கொடுப்பது, குப்பைகளை அகற்றுவது என சில வேலைகளை செஞ்சிக்கொடுப்பேன். அதுமட்டுமின்றி, சின்ன பிள்ளைங்க இருந்த முடிவெட்டுற வேலையும் பாத்துக்குவேன். அவரு முடியெல்லாம் நீளமா வைச்சுட்டு, பஃங்கு வைச்சுட்டு ஸ்டைலுன்னு சுத்திட்டு இருப்பாரு. அது எனக்கு பிடிக்காது அதனால அவருக்கு நானே முடி வெட்டிவிட்டு, சேவ் பண்ணிவிடுவேன்.
இடையில அவருக்கு பெரிய ஆக்ஸிடன்ட் ஆயி 9 மாசம் ஹாஸ்பிட்டல்லே இருந்தாரு. அப்போ குடும்ப சுழல் காரணமாக வேறு வழியே இல்லாமல், நானே கடைக்கு வர ரெகுலர் கஸ்டமர்ஸ்க்கு முடி வெட்டுறது, சேவ் பண்றதுன்னு எல்லா வேலையும் பாக்க ஆரம்பிச்சேன். பெண்ணுங்கிறதால, எனக்கு பாதுகாப்பா எங்க அப்பா என் கூடவே நாள் முழுவதும் கடையில வந்து உக்காந்திருப்பாரு. அதே சமயத்தில் என்னுடைய கணவரின் உடல் நிலையும் நல்லமுறையில் முன்னேறி வந்தது. ஆனால், இந்த பாலப்போன குடியினால 2014ல்ல இறந்து போயிட்டாரு.
‘ரெண்டு குழந்தைங்களை வச்சுக்கிட்டு நீ இந்த தொழிலை செய்யாத அது அவங்க எதிர்காலத்தை பாதிக்கும்’ ன்னு சொந்தகாரங்க எல்லாருமே இந்த வேலைய விட்டுடுன்னு சொன்னாங்க. நமக்கான இடம், நமக்குன்னு உள்ள கஸ்டமர் இருக்காங்க. செய்யும் தொழில்தான் தெய்வம், கண்டிப்பா இந்த தொழிலை நம்மால சரியா செய்ய முடியும்ன்னு முழுசா இந்த தொழில்ல இறங்கிட்டேன்.
ஆரம்பத்தில கொஞ்சம் பயமா தான் இருக்கும். முடி வெட்டி, சேவிங் பண்ண வர பாதிபேரு குடிச்சிட்டு தான் வருவாங்க. அப்படி இருந்தா நான் திருப்பி அனுப்பிச்சிடுவேன். இப்போ எல்லாம் ஓரளவு பரவாயில்லை. பழகுன இடம்கிறதால எந்த பயமும் இல்லை. உழைப்பு ஒன்று மட்டும் தான் மூலதனம். என் இரண்டு குழந்தைங்கள் படிப்புக்கும் உதவுறது இந்த முடிவெட்டுற தொழில்தான்” என்கிறார்.