எல்.இ.டி. பல்புகள் மின் சிக்கனமா..? ஆரோக்கிய கேடா?
குளோபல் வார்மிங் பிரச்சனைக்கு முக்கியக் காரணமே நாம் பயன்படுத்திய குண்டு பல்புகள் தான் என்று கூறப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,524 கிராமங்களில் உள்ள 23,72,412 தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் 14ஆவது நிதிக்குழு மற்றும் மாநில நிதிக்குழு நிதியிலிருந்து 32 கோடி செலவில் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது.
எல்இடி விளக்குகள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டு காலத்துக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் பொருட்களின் விற்பனையில் 4 முதல் 6 சதவீத அளவுக்கு ஊக்கத் தொகை வழங்கியது மத்திய அரசு. மின் சக்தியைச் சேமிக்க எல்.இ.டி.விளக்கை பயன்படுத்துங்கள் என்று அரசே பிரசாரம் செய்து வருகின்றது. இதனால் இன்று வீடுகள் மற்றும் கடைகள் என எங்கு நோக்கினும் எல்.இ.டி. விளக்குகளே ஆக்ரமதித்துள்ளது.
குறைவான மின் செலவில் அதிக ஒளி உமிழும் தன்மை உள்ள பல்புகளாக இந்த எல்.இ.டி. பல்புகள் செயல்படுகின்றன என்பதே. டியூப் லைட் மற்றும் குண்டு பல்புகளுடன் ஒப்பிடும் போது அயோடின் ஒளி உமிழும் தன்மை குறைபாடு இருப்பதினால் டயோடுகள் ஒன்று கூடி உருவாகக்கூடியது தான் இந்த எல்.இ.டி பல்புகள். இந்த எல்.இ.டி. பல்புகள் மின்சிக்கனத்தின் மூலம் நம் பொருளாதாரத்தை காக்கிறதா அல்லது கண் பார்வையை பாதித்து நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறதா.. என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளது.
எல்.இ.டி.விளக்குகளில் மின்காந்த அலைக்கற்றைத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எந்தவகை மின்சாதனம் என்பதைப் பொறுத்து, மின்காந்த அலைகள் வித்தியாசப்படும். சில விளக்குகளின் ஒளி அலைக்கற்றையில் சேரும்போது, கண்ணுக்கு தெரியாத அகச்சிவப்பு (இன்ஃப்ரா-ரெட்) கதிர்கள் வெளிப்படும். இந்த அகச்சிவப்புக் கதிர்கள் கண்களைப் பாதிக்கும். பெரும்பாலும் நீல நிற விளக்குகளில் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது.
எல்.இ.டி. டிவி, செல்ஃபோன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தும் போது இது மாதிரியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதேநேரத்தில் எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் பாதிப்பின் வீரியம் அமையும். தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு ரெட்டீனாவில் உள்ள ஃபோட்டோ-ரெசிப்டார் (Photo Receptors) மற்றும் மேக்யூலா (Macula) பாதிப்படைந்து பார்வையில் பாதிப்பு ஏற்படலாம்.
சில நேரங்களில் நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. வெள்ளை நிற விளக்குகளைப் பொறுத்தவரை பெரிதாக பாதிப்பு இருக்காது. ஆனால், எரியும் விளக்குகளை நேரடியாகக் கண்களால் பார்க்காத பட்சத்தில் பிரச்னையில்லை. பார்த்தால் பாதிப்பு வர வாய்ப்புண்டு.
எல்.இ.டி. வருகையை அடுத்து சமீப ஆண்டுகளில் எல்.இ.டி. ஒளி மாசுபாட்டினால் கவலைக்குரிய விதத்தில் பூச்சி இனம் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூச்சிகள் குறைந்தால் அதனை நம்பியிருக்கும் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களையும் அது பாதிக்கும். எதுவாயினும் எல்.இ.டி. டி.வியை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பது, எல்.இ.டி லேப்டாப்களை இடைவெளியின்றி தொடர்ந்து பயன்படுத்துவது, எல்.இ.டி செல்ஃபோன் திரைகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
-சந்தான கிருஷ்ணன்