சட்ட ரீதியான சொத்து பிரிப்பு
அறிய வேண்டிய விஷயங்கள்…“பரம்பரையாக ஆண்டு அனுபவித்து வரும் குடும்பச் சொத்து, குடும்ப வியாபாரம், காடு, வயல்வெளி என ஆரம்பித்து, பங்குச் சந்தை முதலீடு, வங்கி இருப்பு, தங்கம், வைரம் வரை அனைத்தையும் குடும்ப உறவுகளுக்குள் பிரித்துக் கொள்ளும் நிகழ்வுதான் சொத்து பிரிப்பு அல்லது பாகப்பிரிவினை ஆகும்.
பாகப்பிரிவினையின் அம்சங்கள், நுணுக்கங்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், அடிப்படையில் சில விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் தலைவராக இருந்து வழிநடத்தும் ஒருவரின்கீழ் மொத்தக் குடும்பமும் கட்டுப்பட்டு சுமுகமாக குடித்தனம் நடத்தி வருவார்கள். தலைமையாக இருப்பவர் யாருக்கு என்ன சேரவேண்டும் என்பதைப் பார்த்து வருவார். ஆனால் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் இருப்பார்கள். ஒருவருக்குப் பணத்தின் மீது, சொத்தின் மீது அவ்வளவு ஆர்வம் இருக்காது. மற்றொருவர் எப்போதும் பணம், பணம் என்றுதான் இருப்பார். ஒருவருக்கு பொருளீட்டும் அதாவது, பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும். மற்றொருவருக்கு அந்தத் திறமை இருக்காது.
எனவே, குடும்பம் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து குடும்பத்தின் தலைமை நிலையில் இருப்பவர் தான் நன்றாக இருக்கும்போதே அனைவரையும் கலந்து ஆலோசித்து, குடும்ப உறவுகளின் நிலை அறிந்து சுமுகமாக பாகப் பிரிவினையைச் செய்துவிடுவது நன்மை பயக்கும்.
பாகப்பிரிவினை என்பது குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரமாகும். இதன் மூலம் பெற்றோர்கள் வழி சொத்தில் வாரிசுகளுக்கு சொத்துரிமை கிடைக்கும். பாகப்பிரிவினையை அனைவருக்கும் மதிப்பின் அடிப்படையிலோ, அளவின் அடிப்படையிலோ சமமாகப் பிரிக்கலாம். அல்லது சொத்தில் உரிமை உள்ளவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் பிரித்துக்கொள்ளலாம்.
சில நேரங்களில் பாகப்பிரிவினையின்போது மைனராக இருக்கும் வாரிசு அல்லது கட்டிக் கொடுத்துவிட்ட பெண் பிள்ளைகள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பாகப்பிரிவினை செய்யப் பட்டிருந்தால் அவர்கள் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் நிலை ஏற்படும்.