உயிர் காக்கும் சுத்தம்
சுதந்திர பெற்ற எழுபதாண்டு கால இந்தியாவில் சுத்தத்திற்கென வரி வசூலிக்கும் சூழலுக்கு நமது நாட்டின் சுகாதார கட்டமைப்பு மோசமடைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களில் பிரதானமானது தூய்மை இந்தியா திட்டம். தூய்மை என்பது நாம் குளித்து முகத்தில் பவுடர் பூசிக் கொள்வது அல்ல. உடல் தூய்மை மட்டுமின்றி, சுற்றுப்புறத் தூய்மையே நம்முடைய பொருளாதாரத்தை உயர்த்தும் என்பது கண்கூடு. தூய்மையற்றவர்களால் ஏற்படும் நோய் தொற்று தனி மனிதனை மட்டும் இன்றி அவனை சார்ந்த, சுற்றியுள்ள அனைவரின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன.
பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது, மலம் கழிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொது சுகாதாரம் சீரழிக்கப்படுகிறது. இவற்றை களைய ஒவ்வொரு வீடுகளுக்கு தனித்தனி கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரப்படுகின்றன. அத்துடன் குப்பைகள் அற்ற நிர்வாகத்திற்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகின்றன.
கொரோனா நோய் தொற்று காலமே தூய்மை பற்றிய அவசியத்தை நமக்கு பெருமளவு உணர்த்தியது. ஆனால் கொரோனா குறித்த அச்சம் விலகியதும் மக்கள் மீண்டும் பழைய மனநிலைக்கு மாறிவருகின்றனர்.
“தன் வீடு சுத்தமாக இருந்தால் பேர்தும். எதிர்வீடு எப்படி இருந்தால் என்ன என்ற மனநிலை மாற வேண்டும். சுத்தம் என்பது பொது மக்கள் மனதில் பதிய வேண்டும்” என்கிறார் விஜய் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் எஸ்.சரவணன்.
திருச்சியில் 1996ம் ஆண்டு விஜய் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பிளிச்சிங் பவுடர் தொழில் தொடங்கி பின்னர் பினாயில், குளோரின் மாத்திரை, லைம் பவுடர், ப்ளோர் கிளீனர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து நகரை தூய்மையாக்கும் பணியில் பெரும் பங்களிப்பை செய்து வரும் உரிமையாளர் சரவணன் நம்மிடம் கூறுகையில்,
“நான் கல்லூரி படிப்பை முடித்த பின் வெளியூரில் வேலை கிடைத்தது. ஆனால் இரவு 7 மணிக்குள் வீடு திரும்பும் வேலையாக இருக்க வேண்டும் என வீட்டில் கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது. அப்போது எனது இரு நண்பர்கள் இணைந்து பிளிச்சிங் பவுடர் விற்பனை தொழிலை பகுதி நேர வேலையாக செய்து வந்தனர். அவர்களுடன் நானும் சென்று டெலிவரி பணியினையும் செய்து வந்தேன்.
இந்நிலையில் நண்பர்கள் ப்ளிச்சிங் பவுடர் விற்பனையை கைவிட்டு வேறு வேலைக்குச் சென்று விட்டனர். எனக்கு அது குறித்த ஓரளவு அனுபவம் இருந்ததால் நாம் அந்த தொழில் செய்வோம் என களத்தில் இறங்கினேன். கையில் ஒரு லட்சம் பணம் இருந்தது. அதை வைத்துக் கொண்டு தொழில் தொடங்க ஆரம்பித்தேன். புதிதாக தொழில் தொடங்க ஆரம்பித்ததும் ஒரு சர்வே செய்தேன்.
அன்றைய காலகட்டத்தில் பிளிச்சிங் பவுடர் விற்பனையினை பகுதி நேர வேலையாகவே செய்து வந்தனர். மேலும் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்குள்ளேயே தங்களது விற்பனை எல்லைகளை அமைத்துக் கொண்டனர். அதைத் தாண்டி சென்று விநியோகம் செய்வதில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் ப்ளிச்சிங் பவுடர் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு வைக்கப்பட்டு, அதில் பயன்படுத்தும் முறை, விலை போன்ற விபரங்கள் மட்டுமே அச்சிடப்பட்டு இருக்கும். எவரும் பிராண்ட் பெயர் (ஙிஸிகிழிஞி ழிகிவிணி) வைத்து விற்க மாட்டார்கள்.
சர்வே எடுக்கும் காலத்திற்குள்ளாகவே கையிலிருந்த பணத்தில் ரூ.50 ஆயிரம் கரைந்துவிட்டது. மீதி உள்ள ரூ.50 ஆயிரத்தில் சென்னையிலிருந்து மூலப்பொருட்களை வாங்கினேன். விஜய் என்ற பிராண்ட் பெயருடன் ப்ளிச்சிங் பவுடரை பாக்கெட்டில் அடைத்தேன்.
அன்றைய மார்கெட் விலையில் ஒப்பிடும் போது எனது பொருள் இருமடங்கு அதிகம் விலை உள்ளதாக இருந்தது. என்றாலும் தரம் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது கூடுதலாக இருப்பதால் விற்பனையாகும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினேன். கடைகளில் எனது ப்ளிச்சிங் பவுடர் விலையை பார்த்து வேண்டாம் என்றார்கள். சிலர் அதை நாவில் வைத்து சுவைத்து பார்த்து, கொஞ்சம் வாங்கினார்கள். சிலர், “இந்த விலையை வைத்துக் கொண்டு இங்கே வராதே” என்று கூறி விரட்டியவர்களும் உண்டு. எல்லாவற்றையும் கடந்து ஓரளவு கையில் உள்ளவற்றை விநியோகம் செய்திருந்தேன்.
ஒரு வாரம் கழித்து வசூலுக்கு சென்ற போது பல இடங்களில் விற்கவில்லை என திரும்பி தந்துவிட்டார்கள். ஒரு சில இடங்களில் மிகக் குறைவான அளவே விற்றிருந்தது. அன்றைய தினம் என்னிடம் மிச்சம் இருந்தது ரிட்டன் எடுத்த பொருளும், தன்னம்பிக்கை மட்டுமே.
அடுத்த கட்டமாக ரிட்டன் ஆன பிளிச்சிங் பவுடர் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று. அங்கு கடைக்கு பொருள் வாங்க வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் எனது பொருளின் தரம் குறித்து விளக்கி அவர்களிடம் அதை இலவசமாக பயன்படுத்த கொடுத்தேன். கையிலிருந்து பாக்கெட் பெரும்பாலானவற்றை இலவசமாக கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். ஒரு வாரத்திற்கு மேல் மார்க்கெட்டில் எனது பொருள் குறித்த விமர்சனம் இன்றி நிசப்தமாக இருந்தது. 10 நாட்கள் கழித்து ஒரு கடைக்கு சென்றேன். அப்போது அந்த கடைக்காரர் “உங்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கொடுத்த ப்ளிச்சிங் பவுடர் கேட்டு வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்” என்றார்.
நம்பிக்கை துளிர்விட மீண்டும் உற்சாகமாக களமிறங்கினேன். விற்பனை தொடங்கியது. நேரடியாக விற்பனை செய்ததோடு டீலர் மூலமும் விற்பனை செய்யத் தொடங்கினேன். பிளச்சிங் பவுடரை தொடர்ந்து பினாயில் தயாரித்தும் விற்றோம். விஜய். சன் என்ற இரு பெயரிலும் விற்றோம். எங்களது பினாயிலில் இயற்கை பொருட்கள் மூலம் மட்டுமே வண்ணம் சேர்க்கப்படுகிறது” என்றார்.
திருச்சி மாநகராட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளுக்கும், சென்னை மெட்ரோ குடிநீருக்கும் நாங்கள் தான் பிளிச்சிங் பவுடர் விநியோகம் செய்கிறோம்”என்றார்.
சுத்தம் சோறு போடும் என்பது மாறி சுத்தம் உயிர் காக்கும் என்ற உணர்வு எழுந்தால் மட்டுமே இந்தியா தூய்மை பெறும்.