திருச்சியில் 45 ஆண்டுகளை கடந்த ஓம் ஜூவல்லரி..!
வெள்ளியில் முதல் தரம், திருச்சியில் முதல் இடம்..!
வெள்ளி நகைகளுக்கென்றே ஒரு கடை 1976ல் தொடங்கப்பட்டு இன்றளவும் ஒரு குண்டுமணி அளவு கூட தங்க விற்பனையில் கவனம் செலுத்தாமல் 100 சதவீதம் வெள்ளி நகைகளையே விற்று தனது 45வது ஆண்டினை அடியெடுத்து வைத்திருக்கிறது திருச்சி, பெரிய கடை வீதியில் உள்ள ஓம் ஜூவல்லரி.
திருச்சியிலேயே பிறந்து வளர்ந்த பெண்களில் 90 சதவீதத்தினர் வெள்ளி பொருட்களை வாங்க ஓம் ஜூவல்லரிக்கு சென்று வந்திருப்பார்கள். அந்த அளவிற்கு பிரசித்திப் பெற்ற இந்த வெள்ளி நகை கடையில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்டால் அது மாறாத தரம், ஏராளமான ரகங்கள் மற்றும் விற்பனைக்கு பின் உள்ள சேவைகள்.
3வது தலைமுறையாக தற்போது ஓம் ஜூவல்லரியை நிர்வாகம் செய்து வரும் அதன் உரிமையாளர் ஜி.கார்த்திக்கிடம் பேசினோம்.
“நீங்கள் கூறிய தரம், ரகம் மற்றும் விற்பனைக்கு பின் உள்ள சேவைகள் குறித்தெல்லாம் சொல்லலாம். ஆனால் விற்பனையில் போட்டியாளர்கள் வந்த பின்பும் நமது விற்பனை குறைந்துவிடாமல் இருக்க நாம் மேற்கொள்ளும் புதிய புதிய உத்திகள் தான் ஒரு நிறுவனத்தை தலைமுறை தாண்டியும் அழைத்துச் செல்கிறது என்று நான் சொல்வேன்.
விலை குறைவுக்கு காரணம் தரம் குறைவா?
ஒரு காலத்தில் நாங்கள் மட்டுமே வெள்ளி பொருட்களை விற்பனை செய்வதில் சிறந்து விளங்கினோம். திடீரென திருச்சியில் புதியதொரு கடை திறந்த போது, நமது விற்பனை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்தது. ஒரு வருடத்திற்கு பின்பு தான் அதை கண்டுணர்ந்தோம். என்ன காரணம் என்று ஆராய்ந்த போது, புதிய கடையின் விற்பனை பாணி தான் என புரிந்தது. அவர்கள், தரத்தில் நம்மை விட சற்று குறைவாக வழங்குவதால், விலை குறைவாகவும் வழங்க முடிகிறது என்பதால் எங்கள் விற்பனை குறைந்து போனது என்பதை அறிந்தோம். நாங்களும் அவர்களுடன் போட்டிப் போட வேண்டும் என்றால் தரத்தை குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு என் அப்பா சிறிதளவும் சம்மதிக்கவில்லை. அப்படி ஒரு வியாபாரமே தேவையில்லை என்று கூறிவிட்டார்.
வெற்றிபெற வைத்த புதிய பாணி
என்ன செய்வது என யோசித்த போது, வாடிக்கையாளர்களை கவர ஒரு புதிய விற்பனை பாணியை கையாண்டோம். எங்கள் கடையில் வாங்கும் வெள்ளி பொருட்களில் ஏதேனும் உடைந்து, நெளிந்து போனால் கூலியின்றி, பாலீஸ் செய்து இலவசமாகவே சரி செய்து கொடுக்கும் யுக்தியை கையாண்டோம். ஓம் என்ற டிரேட் மார்க் பதித்து வெள்ளிப் பொருட்களை விற்கிறோம் என்பதால் எங்கள் தயாரிப்பு பொருட்கள் எது என எங்களுக்கு தெரிந்து விடும். இந்த பாணி எங்களுக்கு ஓரளவு கை கொடுத்தது. இழந்த வியாபாரத்தை மீட்டெடுத்தது.
கார்ப்பரேட் நிறுவன வருகையால் விற்பனை பாதிப்பா?
அடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை. கார்ப்பரேட் நிறுவனங்கள் திருச்சியில் கடை திறந்தது எங்களது விற்பனையை எந்தளவிலும் பாதிக்கவில்லை. காரணம் இன்று வரை நாங்கள் தரக் குறைவின்றி, சரியான விலையில் விற்பனை செய்வதோடு விற்பனைக்கு பின் சேவை. அதனால் அவர்களால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஆன்லைனிலும் தொடருது விற்பனை
அதே நேரம், கால சூழலிற்கு ஏற்ப சில விஷயங்களை நாம் மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். நாங்கள் வெள்ளிப் பொருட்களை முகநூல், வாட்ஸ்-அப், இணைய தளம், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறோம். ஆன்லைனிலே டிசைன் தேர்வு செய்து, பணம் அனுப்பி விடுகிறார்கள். நாங்கள் கூரியர் செய்து விடுகிறோம்.
இவையெல்லாம் சூழலிற்கு ஏற்ப வெற்றியை நோக்கி எடுக்கப்படும் முடிவுகள். ஆனால் ஒரு நிறுவனம் நீண்ட காலம் நிலைத்திருக்க மிக முக்கிய காரணமாகவும், அதையே மூன்று தலைமுறையாகவும் நாங்கள் செய்து வருகிறோம்.
வெற்றிக்கு அனுபவமே படிப்பினை
ஒவ்வொரு ஆண்டும் நமக்கான லாபத்தை முழுமையாக எடுத்து சொத்து வாங்கவோ பிற ஆடம்பர பொருட்கள் வாங்கவோ எண்ணாமல் முடிந்தவரை மீண்டும் நமது தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான் அது சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கித் தரும்.
அதாவது, எங்கள் வியாபாரத்தைப் பொறுத்தவரை, விலை கூடவோ குறைச்சலோ என்று பாராமல் ஒரு நாளைக்கு எவ்வளவு எடைக்கு வெள்ளி பொருட்களை விற்கிறோமோ அதே எடைக்குறிய வெள்ளிப் பொருட்களை இருபத்துநாலு மணி நேரத்தில் மீண்டும் கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்கிறோம். நாளை விலை குறையும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதில்லை. இதனால் நமது முதலீட்டில் கை வைத்து வீண் செலவு செய்வது தவிர்க்கப்படுகிறது. இந்த பாணியை தான் என் தாத்தா, அப்பா கடைபிடித்தார்கள்.
நான் பொறுப்பேற்ற பின் குறைந்த விலையில் வெள்ளி வாங்கலாம் என சர்வதேச சந்தை நிலவரத்தை கண்காணித்தேன். ஆனால் என் தாத்தா, அப்பா பின்பற்றிய பழைய பாணிக்கு என்னால் ஈடுகொடுக்கவில்லை. இது தான் எங்கள் வெற்றிக்கான காரணம் எனச் சொல்வேன்”.
அனைத்துவிதமான வெள்ளி பொருட்களும் விற்பனை
“நாங்கள் வெள்ளி பொருட்களை தயாரிப்பதில்லை. கால் கொலுசு, மெட்டி, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளி பொருட்கள், பிரேஸ்லெட், செயின், தோடு, மூக்குத்தி, பூஜை சாமான்கள், பரிசுப் பொருட்கள், கடவுள் வடிவத்திலான வெள்ளி விக்ரகங்கள் என அனைத்தையுமே வெளியிலிருந்து வாங்கி விற்கிறோம். சேலத்திலிருந்து கொலுசும், கும்பகோணத்திலிருந்து விளக்கு, பூஜை சாமான்கள் மற்றும் கோவை, பெங்களுர் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் கூட வெள்ளிப் பொருட்களை வாங்கி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை செய்கிறோம்.
திருச்சியில் வெள்ளி பொருட்கள் தயாரிப்பு இல்லை…ஏன்?
வெள்ளிப் பொருட்களை இயந்திரங்களினால் தயாரித்தால் மட்டுமே ஓரளவு லாபம் பார்க்க முடியும். சேலம், கும்பகோணம் போன்று திருச்சியில் வெள்ளி பொருட்கள் வேலை செய்யும் ஆட்கள் இல்லை. நாம் ஒரு தயாரிப்பு தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டுமென்றால் அங்கிருந்து அனுபவம் வாய்ந்தவர்களை இறக்குமதி செய்தால் தான் உண்டு.
தங்கத்தில் வேலை செய்யும் போது கிடைக்கும் சேதாரம், கூலி வருவாய் போன்று வெள்ளிப் பொருட்களில் கிடைக்காது. அதனால் தனிப்பட்ட முறையில் வெள்ளிப் பொருட்களை மட்டுமே செய்து தரும் ஆட்கள் திருச்சியில் பெருமளவு குறைவு. இதுவே இங்கு வெள்ளி பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை உருவாகாமல் போனதற்கு முக்கிய காரணமாகும்.
கோவிலுக்குரிய வெள்ளி பொருட்கள் என்றால் கும்பகோணத்தில் மட்டுமே வேலை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் நுணுக்கமான நகாசு வேலைகளை செய்கிறார்கள்.
திருப்பதிக்கு விளக்கு, சமயபுரத்துக்கு வெள்ளி கலசம்
நாங்கள், திருப்பதி தேவஸ்தானத்திற்கு விளக்கு, திருவானைக்காவல் கோவிலுக்கு பல்லக்கு, சமயபுரத்திற்கு வெள்ளி கலசம் என ஏராளமான பொருட்களை கும்பகோணத்திலிருந்து செய்து தந்திருக்கிறோம். கோவில் பொருட்கள் தயாரிக்க, தேவையான எடையில் வெள்ளி தகடுகளை வாங்கி ஸ்தபதிகளிடம் கொடுத்து விடுவோம். அவர்கள் தான் அளவு, எவ்வளவு எடை வெள்ளி தேவை எனக் கூறுவார்கள். மலேசியா முருகன் கோவிலுக்கும் வெள்ளிக் கலசம் செய்து அனுப்பியுள்ளாம்.
கறுக்காத ஆன்டிக் ஜுவல்லரி
மாடல்கள் என்றால் அது ஏராளமாக இருக்கிறது. குறிப்பாக ஆன்டிக் ஜீவல்லரி. பாங்காக்கிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த நகையில் லேசான கறுப்பு தெரியும். அதனால் அது தரமானதாக இருக்காது என நினைப்பார்கள். ஆனால் வெள்ளி கறுக்கும். ஆன்டிக் ஜிவல்லரி கறுக்காது. இந்தியாவில் இது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. ஆன்டிக் ஜுவல்லரி விற்பனை கிராம் கணக்கில் கிடையாது. பீஸ் ரேட்டில் தான் விற்பனை செய்கிறோம்.