இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது. நீங்கள் இதில் உங்களால் முடிந்த தொகையை டெபாசிட் செய்யலாம்.
போஸ்ட் ஆபிஸ் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்ற வகையில் பல சேமிப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால், சாமானியர்களும் சேமிப்புப் பழக்கத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கிய நான்காவது காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய வட்டி விகிதங்களே தொடர்வதால், முதலீட்டாளர்கள் முன்புபோலவே அதிக லாபத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. மேலும், பாதுகாப்பான முதலீட்டுடன் நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு இது பெரிய நிவாரணமாக இருக்கும்.
போஸ்ட் ஆபிஸில் உள்ள பல்வேறு திட்டங்கள் நல்ல வட்டியை வழங்குவது மட்டுமின்றி, முதலீட்டை இரட்டிப்பாக்கும் வசதியையும் வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் மிகவும் பிரபலமானது ‘கிசான் விகாஸ் பத்ரா’ (KVP) திட்டம் ஆகும். இதில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம், முதிர்வு நேரத்தில் உங்கள் பணம் நேரடியாக இரட்டிப்பாகும்.
வட்டி விகிதம் எவ்வளவு? இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் தற்போது 7.5 சதவீத வட்டியை வழங்குகிறது. வங்கி நிலையான வைப்புத் தொகைகளுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதமாகும். நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தாலும், இந்த வட்டி விகிதத்தில், ஒரு நிலையான காலத்தில் உங்கள் தொகை இரட்டிப்பாகும். இந்தத் திட்டம் நடுத்தர மக்களுக்குச் சிறந்த திட்டமாகத் திகழ்ந்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கால அளவைப் பார்த்தால், உங்கள் முதலீடு இரட்டிப்பாவதற்கு 115 மாதங்கள் ஆகும். அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தின் முக்கிய பலம் என்னவென்றால், அரசாங்க உத்தரவாதம் தான். நீண்ட காலத் தேவைகளுக்காகப் பணத்தைச் சேமிக்க விரும்புவோருக்கு இது ஏற்ற திட்டமாகும்.
பணம் இரட்டிப்பாவது எப்படி? உதாரணமாக, ஒருவர் இந்தத் திட்டத்தில் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். முதிர்ச்சியடைந்த பிறகு, அவருக்கு ரூ.2 லட்சமும், வட்டியாக ரூ.2 லட்சமும் கிடைக்கும். அதாவது, அவருக்கு மொத்தம் ரூ.4 லட்சம் கிடைக்கும். இவ்வளவு பெரிய லாபம் எந்த ஆபத்தும் இல்லாமல் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு எவ்வளவு? மேலும், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது. நீங்கள் இதில் உங்களால் முடிந்த தொகையை டெபாசிட் செய்யலாம். இருப்பினும், குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆகும். சிறிய தொகையைச் சேமிக்க விரும்புபவர்கள் கூட இந்தத் திட்டத்தில் சேர்ந்து தங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
திட்டத்தின் அம்சங்கள்… இந்த கிசான் விகாஸ் பத்திர கணக்கை இரண்டு அல்லது மூன்று பேர் தனித்தனியாகவோ அல்லது கூட்டு கணக்காகவோ (ஜாயிண்ட் அக்கவுண்ட்) திறக்கலாம். ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் அதிகபட்சம் மூன்று பேர் வரை இருக்கலாம். இந்தத் திட்டத்திற்கு அரசு உத்தரவாதம் உள்ளது. உங்கள் கூடுதல் வருமானத்தை இந்தத் திட்டத்தில் செலுத்துவதன் மூலம், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றலாம்.



