விலை உயர்த்திய தனியார் செல்போன் நிறுவனங்கள்
நிலை தடுமாறாத பிஎஸ்என்எல்!
இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 22 செல்லுலார் சேவை நிறுவனங்கள் இயங்கி வந்தன. இவை தற்போது வெறும் நான்காக சுருங்கி இருக்கிறது. அதில் ஒன்று மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல். மற்றவை தனியார் நிறுவனங்கள். ஜியோ, ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்கள் மாபெரும் வளர்ச்சி பெற்ற அதே நேரத்தில் மற்ற செல்லுலர் சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. அவைகள் தற்போது இந்திய நிலப்பரப்பில் இருந்து காணாமல் போய்விட்டன.
ஆரம்பத்தில் ஜியோ, இலவச சேவையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. இதை நம்பி மக்களும் பெருமளவில் ஜியோவை நோக்கி நகரத் தொடங்கினர். அதே சமயம் இந்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூன்று மாதத்திற்கு மட்டுமே இலவசமாக சேவையை வழங்க முடியும் என்ற சட்டத்தை மீறி, முதலில் மூன்று மாதம் இலவசம் என்று அறிமுகப்படுத்திய ஜியோ 3வது மாதம் முடியும் நேரத்தில், புத்தாண்டு சலுகை என்று சொல்லி மேலும் மூன்று மாதம் இலவசம் என்று அறிவித்து தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது.
இதனால் மக்கள் மிகப்பெரிய அளவில் ஜியோவை நோக்கி அணிதிரண்டனர். விட்டில் பூச்சிகளாய் பொது மக்கள் பலரும் இந்த 3 தனியார் நிறுவனங்களை அணுகியதால் இன்று அவர்களின் விலை ஏற்ற அறிவிப்பு பெரும் சுமையாக மாறி உள்ளது. ஜியோ 21% கட்டண உயர்வை அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல் 24 சதவீதமும், வோடபோன் 25 சதவீதமும் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது. நஷ்ட கணக்கை காட்டி விலையை அதிகரிக்கக் காரணம் இந்நிறுவனங்கள் பொதுத் வங்கிகளிடம் பெற்ற கடன்களே..! ஜியோ ரூ.3 லட்சம் கோடியும், ஏர்டெல் ரூ.2 லட்சம் கோடியும் வோடபோன் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடியும் பொதுத்துறை வங்கியில் இருந்து கடனாக பெற்று இருக்கின்றன. ஆனால் பிஎஸ்என்எல் ரூ.30 ஆயிரம் கோடியை மட்டுமே கடனாகப் பெற்று இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் பெற்ற இந்த தனியார் நிறுவனங்கள் தங்கள் நஷ்டகணக்கை அரசிடம் காட்டி அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணமான ஏ.ஜி.ஆர் கட்டணத்தை செலுத்தாமல் தொடர்ந்து தவிர்த்து வந்தன. அரசாங்கம் கட்டணத்தை செலுத்த நெருக்கிய போது அவர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.
உச்சநீதிமன்றமும் கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று உத்தரவு வழங்கியது. பிறகு மீண்டும் அரசிடம் சென்று நாங்கள் நஷ்டத்தில் இயங்கும் இந்த நேரத்தில் அரசுக்கு கட்டணம் செலுத்தினால் மேலும் நஷ்டம் அடைவோம் என்று கூறி கட்டணத்தை செலுத்த கால அவகாசம் பெற்றனர். இப்படி அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் செலுத்தாமல், வங்கியிடமிருந்து கடனை பெற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனங்கள் தான் தற்போது தொலைத்தொடர்பு சேவைக்கான விலையை உயர்த்தி பணத்தை அதிகளவில் பெறத் தொடங்கிவிட்டனர்.
இப்படி கிடைக்கும் வழி எல்லாம் லாபம் பார்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இன்று வரை 4G சேவை வழங்கப்படவில்லை. இந்தியாவில் பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல், வோடபோன் என்ற நான்கு செல்லுலார் நிறுவனங்களுக்கிடையே மட்டும் தான் போட்டி நிலவுகிறது. அதில் மூன்று நிறுவனங்களுக்கு 4G சேவை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மட்டும் இன்று வரை வழங்கப்படவில்லை. மேலும் தனது கட்டமைப்பை உயர்த்திக் கொள்வதற்காக பிஎஸ்என்எல் வெளிநாடுகளிலிருந்து இயந்திரங்களை வாங்கச் சென்றாலும் இந்திய அரசோ இந்தியாவில் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை மட்டும் தான் பிஎஸ்என்எல் வாங்க வேண்டும் என்ற தடை விதித்திருக்கிறது.
அதேநேரம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தேவையான சாதனங்களை இந்தியாவில் எந்த நிறுவனங்களும் உற்பத்தி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. மேலும் சாதனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி முயற்சியில் தற்போது தான் டி.சி.எல் என்ற நிறுவனம் இறங்கியிருக்கிறது.
இந்நிலையிலும் இந்தியா முழுக்க 75 ஆயிரத்திற்கும் அதிகமான டவர்களை அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் பைபர் சேவையை வழங்கி நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கி வருகிறது பிஎஸ்.என்.எல். நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது தனிமனித வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய பங்காற்றி இருக்கின்றன. பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி வேகம் வழங்கப்பட்டால் பிஎஸ்என்எல் மட்டும் வளர்ச்சி அடையாமல் நாட்டையும் சேர்த்து வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
-இப்ராஹிம்