காப்பீடுக்கான க்ளைம் தொகையை ரொக்கமாக பெறுவதற்கான தீர்வுகளுக்கான ஆரம்ப அங்கீகாரத்திற்கு ஒரு மணிநேரமும், இறுதி ஒப்புதலுக்கு மூன்று மணிநேரமும் கட்டாய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) பெறப்பட்ட மொத்த புகார்களில் காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கேஷ்லெஸ் மருத்துவ பாலிசிக்கான உரிமைகோரல் தீர்வுகளை தீர்க்காத புகார்களின் எண்ணிக்கை 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த நிதியமைச்சர், 2024-25 நிதியாண்டில் பீமா பரோசா போர்ட்டலில் மொத்தம் 2,57,790 புகார்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 4,811 புகார்களுக்கு, காப்பீட்டாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வை வழங்கவில்லை என்றும், இது அந்த ஆண்டில் பெறப்பட்ட மொத்த புகார்களில் 1.87 சதவீதமாகும் என்றும் கூறினார். நடப்பு ஆண்டில் (2025-26) செப்டம்பர் 30 வரை மொத்தம் 1,36,554 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 532 புகார்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வை வழங்கவில்லை. இது பெறப்பட்ட மொத்த புகார்களில் 0.39 சதவீதமாகும்.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) மருத்துவ காப்பீட்டு வணிகம் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் விதிகளின்படி, ஜூலை 31, 2024-க்குள் பணமில்லா கோரிக்கைகளுக்கான கட்டாய காலக்கெடுவைப் பின்பற்றுவதற்குத் தேவையான அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை காப்பீட்டாளர்கள் செயல்படுத்த வேண்டும். காப்பீடுக்கான க்ளைம் தொகையை ரொக்கமாக பெறுவதற்கான தீர்வுகளுக்கான ஆரம்ப அங்கீகாரத்திற்கு ஒரு மணிநேரமும், இறுதி ஒப்புதலுக்கு மூன்று மணிநேரமும் கட்டாய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பீமா பரோசா தளம் காப்பீட்டாளர்களின் புகார் மேலாண்மை அமைப்புகளுடன் (CMS) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக IRDAI தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதனால் பீமா பரோசாவில் பதிவு செய்யப்படும் புகார்கள் காப்பீட்டாளர்களின் புகார் மேலாண்மை சிஸ்டமில் நிகழ்நேர அடிப்படையில் பிரதிபலிக்கின்றன. இந்தப் புகார்களை 14 நாட்களுக்குள் காப்பீட்டாளர் தீர்க்க வேண்டும் என்று காலக்கெடு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பீமா பரோசா அமைப்பு காப்பீட்டு குறைதீர்ப்பாள அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படவில்லை என்றும், புகார்களை தானாகவே காப்பீட்டு குறைதீர்ப்பாளரிடம் கொண்டு செல்ல பீமா பரோசாவில் எந்த ஏற்பாடும் இல்லை என்றும் ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.
இருப்பினும், காப்பீட்டாளர்கள் வழங்கிய தீர்வில் புகார்தாரர் திருப்தி அடையவில்லை என்றால், தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட காப்பீட்டு குறைதீர்ப்பாளரிடம் புகார் அளிக்கும் வசதியும் அவர்களுக்கு உள்ளது. இத்தகைய புகார்களை நேரடியாகவோ அல்லது மின்னணு முறையிலோ தாக்கல் செய்யலாம். 2024-25 நிதியாண்டில், நிவாரணம் கோரி காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக 53,102 புகார்கள் காப்பீட்டு குறைதீர்ப்பாளரின் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டில் மருத்துவம் மற்றும் பாலிசிதாரர்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதி மீறல்கள் தொடர்பாக பதினொரு காரணம் கேட்கும் அறிவிப்புகள் வழங்கப்பட்டன என்றும் இதில் தேவையற்ற உரிமைகோரல் விலக்குகள் மற்றும் முறையற்ற உரிமைகோரல் நிராகரிப்புகள் அடங்கும் என்று நிதியமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.