கிழிந்து ரூபாய் நோட்டுக்கள் குறித்து ஆர்பிஐ அறிவிப்பு..!
கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக பொதுமக்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை வங்கிகள் பின்பற்ற முடியாமல் போனது.
இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் RBI முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இனி கிழிந்த மற்றும் கசங்கிய ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கொரோனா காரணமாக செயல்படுத்தப்படாமல் இருந்து வந்த இந்த அறிவிப்பை தற்போது மேற்கொள்ளும் படி வங்கிகளுக்கு RBI வலியுறுத்தியுள்ளது.
இதன் மூலம் இனி ஒவ்வொரு கிழிந்த ரூபாய் நோட்டுகளையும் அருகில் இருக்கும் வங்கிகளில் இருந்து மாற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கிழிந்த அல்லது கசங்கிய ரூபாய் நோட்டுகளுக்கு திரும்ப அளிக்கப்படும் பணம் குறித்த விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2 ரூபாய்க்கு மேல் மதிப்புடைய நோட்டுகள் 50% வரை இரண்டாக கிழிக்கப்படாதிருந்தால் அவற்றிற்கு முழு பணமும் கிடைக்கும். ரூ.50 மதிப்புள்ள நோட்டுகளில், இரண்டாக கிழிக்கப்படாத பகுதி, 40%க்கும் குறைவான அளவில் இருந்தால் அது நிராகரிக்கப்படலாம். அதே நேரத்தில் இரண்டாக கிழிக்கப்படாத பகுதி, 40% முதல் 80% இருந்தால் அதற்கு பாதி தொகை கொடுக்கப்படும். ரூபாய் நோட்டின் இரண்டாக கிழிக்கப்படாத பகுதி, 80%க்கு மேல் இருந்தால் அதற்கு முழு தொகையும் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போதுமான அளவு சில்லரை நாணயங்களையும் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.