இந்த ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 4-வது முறையாகும்.

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் டிசம்பர் மாதத்துக்கான நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் டிச.3, 4 மற்றும் இன்று நடைபெற்றது. இறுதி நாளான இன்று இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 5.5%ல் இருந்து 5.25%ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வட்டி விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
2025-2026ஆம் நிதியாண்டில் இதுவரை மொத்தம் 125 பேசிக் பாயிண்ட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 4-வது முறையாகும். இதன்மூலம் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இந்த வட்டி அதிகரிக்கும்போது வங்கிகள் நமக்கு வழங்கும் கடன்களின் வட்டியும் உயரும். இதனால் இஎம்ஐ அதிகரிக்கும். ஆனால், இந்த வட்டி விகிதம் குறையும்போது, வங்கிகள் நமக்கு வழங்கும் கடன்களின் வட்டியும் குறையும். இதனால் இஎம்ஐ குறையும்.


